தாதா சோட்டா ஷகீலின் தம்பி என்று கூறிக் கொண்டு மும்பையைச் சேர்ந்த ஒரு ஆடை வடிவமைப்பாளரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் நடித்த நடிகர் அஜீத் பாண்டே என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
பிரபல தயாரிப்பாளர் ராமானந்த் சாகரின் தயாரிப்பு நிறுவனத்தில் தயாரிப்புப் பிரிவு தலைவராகவும், ஆடை வடிவமைப்பு இயக்குநராகவும் பணியாற்றி வருபவர் பாதிக்கப்பட்ட அந்த நபர்.
ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் ஜாவேத் கூன் என்ற கேரக்டரில் நடித்தவர்தான் அஜீத் பாண்டே. டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.
இயக்குநரை அணுகிய அவர் தனது பெயர் இர்பான் ஹுஸ்ரி என்றும், சோட்டா ஷகீலின் தம்பி எனவும் கூறி மிரட்டியுள்ளார். அஜீத் பாண்டே என்பவருக்கு தொடர்களில் நடிக்க வாய்ப்பு தர வேண்டும் எனவும் மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து இணை போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியா கூறுகையில், பாதிக்கப்பட்ட நபரரை அணுகிய பாண்டே, தன்னை ஹூஸ்ரி என்று அறிமுகப்படுத்தியுள்ளார். சோட்டா ஷகீலின் தம்பி என்றும் கூறியுள்ளார். அஜீத் பாண்டேவுக்கு நடிக்க வாய்ப்பு தருமாறும் மிரட்டியுள்ளார்.
ஆனால் அப்படியெல்லாம் திடீரென யாருக்கும் வாய்ப்பளிக்க முடியாது என அந்த இயக்குநர் கூறவே, அப்படியானால் ரூ. 20 லட்சம் கொடு, இல்லாவிட்டால் உயிருடன் இருக்க முடியாது என்று மிரட்டியுள்ளார். பின்னர் அவர் போய் விட்டார்.
இதுகுறித்து அந்த இயக்குநர் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் விசாரணை நடத்தினர். இயக்குநரின் செல்போனில் முன்பு பேசியிருந்தார் பாண்டே. அதை வைத்து எங்கிருந்து போன் வந்தது என்பதை அறிந்தோம்.
மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா என்ற இடத்தில் அந்த போனுக்கான சிம் கார்டு வாங்கப்பட்டிருந்தது. அஜீத் பாண்டேதான் தனது பெயரில் அதை வாங்கியிருந்தார் என்றும் தெரிய வந்தது.
இதையடுத்து பாண்டேவுக்கு வலை விரிக்கப்பட்டது. பயந்தார் ரயில் நிலையத்தில் வைத்து பாண்டேவை போலீஸார் கைது செய்தனர் என்றார் ராகேஷ் மரியா.
ஜெய் ஹனுமான் உள்ளிட்ட சில முக்கிய சீரியல்களில் நடித்தவராம் இந்த பாண்டே.
நடிக்க வாய்ப்பு கேட்டு தாதாவின் பெயரை பயன்படுத்திய பாண்டே இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment