75 நாட்களில் என்னுடைய காட்சிகளை எடுத்து முடிவதாக செல்வராகவன் வாக்குறுதி தந்து ஆயிரத்தில் ஒருவன் படத்தில் என்னை ஒப்பந்தம் செய்தார். ஆனால் 240 நாட்கள் இழுத்தடித்து டார்ச்சர் செய்தது உண்மைதான். ஆனால் இப்போது அந்த வருத்தமில்லை... காரணம் படம் அருமையாக வந்துள்ளது' என்கிறார் ரீமா சென்.
செல்வராகவன் இயக்க, ரீமா சென், கார்த்தி நடித்துள்ள பிரமாண்ட படம் ஆயிரத்தில் ஒருவன். ரூ 34 கோடி செலவில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடித்தது குறித்து நடிகை ரீமா சென் இப்படிக் கூறுகிறார்:
செல்வராகவன் என்னை “ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் ஒப்பந்தம் செய்தபோது 75 நாட்களில் நான் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்து முடித்து விடுவதாக கூறினார். ஆனால் அது 240 நாட்களுக்கு மேல் நீடித்தது. ரொம்ப டார்ச்சராக இருந்தது. இதனால் மிகவும் வருத்தமடைந்தேன்.
மேலும் நிறைய புதுப்பட வாயப்புகளையும் இழந்தேன். நிறைய தயாரிப்பாளர்கள் என்னிடம் கால்ஷீட் கேட்டு அணுகினர். செல்வராகவனைப் போய் கேளுங்கள் என்று சொல்லி அனுப்புவேன். அவர் எனக்கு செய்ததற்கு பதிலுக்கு பதில் டார்ச்சர் இது.
தயாரிப்பாளர்களும் செல்வராகவனிடம் எப்போது படம் முடியும் என்று கேட்டு கேட்டு அவரை எரிச்சல் பட வைத்தனர். இதனால் என் மீது செல்வராகவனுக்கு கடும் கோபம் ஏற்பட்டது.
ஆனால் இப்போது இந்த வருத்தமெல்லாம் மறைந்து விட்டது.
தாமதமானாலும் கூட இந்த படத்தில் நடித்தது எனக்கு பெருமைதான். வித்தியாசமான கதை, அருமையான மேக்கிங். நான் முழு திருப்தியோடுதான் நடித்தேன். தாமதமானாலும் தரமான படம் தருவதுதானே செல்வராகவன் ஸ்டைல்.. அவர் மிகுந்த ஈடுபாட்டுடன் உருவாக்கியுள்ளார்.
இந்தப் படம் தாமதமானதற்கு நிறைய காரணங்கள் இருந்தன. ஆனால் அதையல்லாம் மறக்கடிக்கும் அளவு வெற்றி பெறும் என்றார் ரீமா.
No comments:
Post a Comment