திரைப்பட நிகழ்ச்சிகளில் கவர்ச்சி உடையில் வந்து கலக்குவது நடிகைகளின் புதிய ட்ரெண்டாகிவிட்டது. சில தினங்களுக்கு முன் மகா குட்டை பாவாடையுடன் வந்து மீனாட்சி கிளப்பிய சூடு ஆறுவதற்குள், ஆயிரத்தில் ஒருவன் பட பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் மஞ்சள் நிற கவர்ச்சி உடையில் வந்து கலக்கி விட்டார் ரீமா சென்.
கார்த்தி, பார்த்திபன், ரீமாசென், ஆன்ட்ரியா ஆகியோர் நடித்து, செல்வராகவன் இயக்கியுள்ள படம் 'ஆயிரத்தில் ஒருவன்', விரைவில் திரைக்கு வரவுள்ள இந்த பிரமாண்ட படத்தின் பாடல்கள் வெளியீடு வித்தியாசமான முறையில் சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் ஞாயிற்றுக் கிழமை நடந்தது.
ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்த பாடல்கள் அடங்கிய சி.டி.யை அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வைத்து மேடைக்கு கொண்டு வந்தார்கள். பாடல்களை இயக்குநர் ஷங்கர் வெளியிட, இயக்குநர் கே.பாக்யராஜ் பெற்றுக் கொண்டார்.
கிட்டத்தட்ட தமிழ் திரையுலகமே திரண்டு வந்துவிட்டது என்று சொல்லும் அளவுக்கு ஏராளமான விவிஐபிக்கள் அரங்கை நிறைத்திருந்தார்கள்.
இந்தப் படத்தில் இடம்பெற்ற 4 பாடல்களை மேடையில் லைவாக பாடிக் காட்டினார்கள். படத்தில் பாடிய கலைஞர்களை வைத்தே, ஜிவி பிரகாஷ் நடத்திய இந்த லைவ் இசை நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றது.
தனுஷ் - ஐஸ்வர்யா ஆட்டம்
'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் செல்வராகவனின் தம்பியும், நடிகருமான தனுஷ் மனைவி ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து ஒரு பாடலை சொந்த குரலில் பாடியுள்ளார். "உன் மேல ஆச வச்சேன்" என்ற கலக்கல் பாடல் அது.
நிகழ்ச்சியில் இந்தப் பாடலை தனுஷும் ஐஸ்வர்யாவும் பாடி ஆட, ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.
இந்தப் பாடலுக்குப் பிறகு தனுஷிடம், உங்கள் வெற்றிக்கு யார் காரணம் என்று கேள்வி கேட்டனர். உடனே அவர் சற்றும் தாமதிக்காமல், என் அம்மா, அப்பா, அண்ணன் மற்றும் மனைவி ஐஸ்வர்யா என்று கூறி கைதட்டல் பெற்றார்.
அதைத் தொடர்ந்து நடிகை பூர்ணா குழுவினரின் பரத நாட்டியம் நடைபெற்றது. நைஜீரியா நாட்டு கலைஞர்களின் பாரம்பரிய நடனமும் இடம்பெற்றது. கேரளாவின் செண்டை மேளம், மற்றும் கதகளி ஆட்டமும் நடந்தது.
படத்தின் கதாநாயகர்களில் ஒருவரான பார்த்திபன் பேசும் போது, "ஆயிரத்தில் ஒருவன் படம், உலக அளவில் பேசப்படும் படமாக இருக்கும். ஹாலிவுட் படங்களின் தரம், தொழில்நுட்பம் இந்தப் படத்தில் முழுமையாக இருப்பதைப் பார்க்கலாம். இந்த படத்துக்காக 256 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. நான், 150 நாட்கள் நடித்தேன். ஆனால் எனக்கு வசனங்கள் குறைவு. ஒன்றரை நாளில் டப்பிங் பேசி விட்டேன்" என்றார்.
தமிழ்தான் முக்கியம்!
இயக்குநர் செல்வராகவன் ஆரம்பம் முதலே மேடைக்கு வராமல், தன் மனைவி சோனியாவுடன் பார்வையாளர் வரிசையிலேயே அமர்ந்திருந்தார். பின்னர் கடைசியில் பேச வந்தார்.
அவர் கூறியதாவது:
"எனக்கு ஹாலிவுட் , ஆஸ்கார் விருதுகள் மீது ஆசை இல்லை. 'நல்ல படம் கொடுக்கிறார் செல்வராகவன்' என்று ரசிகர்கள் பாராட்டினால் போதும்.
தமிழ்தான் முக்கியம் என்பதால் இந்தியில் வாங்கிய அட்வான்ஸைக் கூட திருப்பிக் கொடுத்துவிட்டேன்", என்றார் செல்வராகவன்.
முன்னதாக நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார் லதா ரஜினிகாந்த் .
படத்தின் கதாநாயகிகள் ரீமாசென், ஆன்ட்ரியா இருவரும் படு கவர்ச்சியாக உடையணிந்து வந்து பார்வையாளர்களின் கவனத்தைச் சிதறடித்தனர்.
No comments:
Post a Comment