19 ஸ்டெப்ஸ் எனும் படத்துக்காக களறிச்சண்டை கற்கும் போது நடிகை அசின் காயமடைந்தார்.
கமல்ஹாசன் சிறப்பு வேடத்தில் தோன்ற, ஜப்பானிய நடிகர் தாடனோ அஸனோ நாயகனாக நடிக்கும் சரித்திரப் படம் 19 ஸ்டெப்ஸ். இந்தப் படத்தில் அசின்தான் கதாநாயகி. தாடனோ அஸனோவுக்கு ஜோடியாக நடிக்கிறார். கமலுக்கு ஜோடி கிடையாது.
பரத் பாலா இயக்கும் இந்தப் படத்தில் களறிச் சண்டை வீராங்கனையாக வருகிறார் அசின்.
இந்த வேடத்தை சிறப்பாகச் செய்ய, நிஜமாகவே களறிச் சண்டை கற்று வருகிறார். இதற்காக கேரளாவிலிருந்து களறிச் சண்டை நிபுணர் ஒருவரை வரவழைத்து பயிற்சி அளிக்கிறார்கள் அசினுக்கு.
சில தினங்களுக்கு முன் இப்படி கடும் பயிற்சியிலிருந்த போதுதான், வழுக்கி விழுந்தார் அசின். இதில் அவருக்கு லேசான தசைப் பிடிப்பு ஏற்பட்டது. அந்த வலியுடனே அவர் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டார். இந்த களறிச் சண்டை பயிற்சியின்போது வாள்வீச்சுப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. அப்போது தவறுதலாக அசின் வாளை வீச, எதிரில் பயிற்சியிலிருந்தவருடைய வாள் தவறுதலாக அசின் கைகளைக் கீறி விட்டது. இதில் அசினுக்கு ரத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவருக்கு ஆயுர்வேத சிகிச்சையும் அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஆயுர்வேத சிகிச்சை மூலம் குணமடைந்து வருகிறார் அசின்.
இன்னும் இரு வாரங்களில் 19 ஸ்டெப்ஸ் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமாகிறது. தமிழ், மலையாளம், ஜப்பானிய மொழிகளில் வெளியாகிறது இந்தப் படம்.
No comments:
Post a Comment