Please Visite here - www.cenimagallary.blogspot.com

Sunday, June 28, 2009

கருணாநிதி ஓய்வெடுத்தால் கேஸ் போடுவோம் - விவேக்

கருணாநிதி ஒரு அரசு ஊழியர். ஒரு அரசு ஊழியருக்குள்ள அத்தனை சலுகைகளும் அவருக்கும் உண்டு. ஆனால் ஒரே ஒரு சலுகை மட்டும் அவருக்குக் கிடையாது. அப்படி அவர் அந்த சலுகையைப் பெற்றால் அவர் மீது கேஸ் போடுவோம், என்றார் நகைச்சுவை நடிகர் விவேக்.

கருணாநிதி கதை வசனம் எழுதும் நீயின்றி நானில்லை படத்தின் துவக்க விழா நேற்று சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் நடந்தது.

இந்த விழாவில் தமிழ் நடிகர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

ஏவிஎம் ஏசி ப்ளோருக்கு வெளியே பெரிய பந்தல் அமைக்கப்பட்டு அதனுள் மேடை போட்டிருந்தார்கள். விழாவில் பங்கேற்ற நடிகர் விவேக் பேசியதாவது:

"இந்த படத்தில் நானும் நடிக்க வேண்டும் என்று கலைஞர் விரும்புவதாக தயாரிப்பாளரும் டைரக்டரும் சொன்னார்கள். என் கேரக்டர், கதை போன்ற விவரங்களை கேட்டேன். எங்களுக்கு தெரியாது. முதல்வருக்குத்தான் தெரியும் என்றனர். எல்லாமே முதல்வருக்குத்தான் தெரியும் என்று அவர்கள் கூறியதால், ஸ்டண்ட் மாஸ்டர் யார் என்றேன் சும்மா கோத்து வாங்கலாம் என்ற எண்ணத்தில். அதற்கும் முதல்வர்தான் என்று அவசரத்தில் சொல்லிவிட்டு சமாளித்தார்கள்.

உண்மையில் கலைஞரும் 'சூப்பர் பைட் மாஸ்டர்'தான். அரசியலில் ஆரம்பித்து, இன்று வணங்காமண் கப்பல் இலங்கை சென்று சேரும் வரையில் எவ்வளவோ போராட்டங்களை சந்திக்கிறார்.

சினிமாவில் ரோப் கட்டி சண்டையிடுகின்றனர். அவர் 'ஹோப்' (நம்பிக்கையை) வைத்து போராடுகிறார். அதன் மூலம் எவ்வளவோ சாதித்து இருக்கிறார். வசனங்களை நீட்டியும் சுருக்கியும் சொல்ல அவரால்தான் முடியும். பராசக்தியில் ரங்கூனில் இருந்து வரும் சிவாஜி கணேசன் பிச்சை கேட்பவனை பார்த்து, 'தமிழ் நாட்டின் முதல் குரலே இப்படி இருக்கிறதே...' என்று நறுக்கென வசனம் பேசியது கலைஞரால் மட்டுமே செய்யக்கூடியது.

கலைஞர் ஒரு அரசு ஊழியர். அவருக்கு அரசு ஊழியர்களுக்குள்ள அத்தனை சலுகைகளும் உண்டு. ஒரே ஒரு சலுகையை தவிர. அந்தச் சலுகையை அவர் பெற்றால் நாம் அனைவரும் கேஸ் போடலாம். அந்தச் சலுகை 'ஓய்வு ஊதியம்' பெறுவது. அவருக்கு ஓய்வே கிடையாது. அப்படி ஓய்வு கேட்டால் நாங்கள் கேஸ் போடுவோம்...", என்றார்.

கமல்ஹாஸன்... ஆயுள் கால பேனா!

பின்னர் கமல்ஹாஸன் பேசியதாவது:

நான் ஒரு தடவை வெளிநாடு சென்றபோது ஆயுள் காலத்துக்குள் பயன்படக்கூடிய ஒரு பேனா பற்றி விளம்பரப்படுத்தி இருப்பதை பார்த்தேன். அதை கலைஞருக்கு வாங்கி தரலாமா என்று யோசித்தேன். ஆனால் அவருக்கு அது தேவையில்லை. நீண்ட காலமாக அவர் எழுதிக்கொண்டிருக்கிறார். எழுதுவதற்கு மை மட்டும் போதாது. அறிவும் வேண்டும்.

கலைஞர் எழுத்துக்களில் ஒளி வீசுகிறது. கலைஞர் வசனம் பேசித்தான் இந்த சினிமாவுக்கே வந்தேன். நடிக்கச் சொல்லி கேட்பவர்களிடம் அவர் வசனத்தை பேசித்தான் நடித்துக் காட்டி இருக்கிறோம். இன்னமும் அவரது பேனா எங்களுக்காக எழுத வேண்டும். கலை உலகில் தொடர்ந்து கோலோச்ச வேண்டும், என்றார்.

சூர்யா...

நடிகர் சூர்யா பேசியதாவது:

என்னுடைய நேருக்கு நேர் படத்தை கலைஞர் பார்த்து வாழ்த்தினார். அந்த வாழ்த்துக் கடிதம் என்னை இந்த அளவு உயர வைத்திருக்கிறது. தினமும் அவர் 16 மணி நேரம் உழைக்கிறார். வீட்டு வேலைகளை கூட சிறிது நேரம் நம்மால் செய்ய முடியவில்லை.

ஆனால் அவர் மக்களுக்காக, மாவட்டத்துக்காக, மாநிலத்துக்காக எவ்வளவோ காரியங்களை செய்வது ஆச்சரியமாக உள்ளது. அவரிடம் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது. அவரால் திரை உலகம் பிரகாசமாக இருக்கிறது. இனி கலைஞறின்றி தமிழ் சினிமா இல்லை, என்றார்.

பெயரைச் சொல்கிறார்களே... மனோரமா

நடிகை மனோரமா பேசியதாவது:

எதிர்க்கட்சிகளில் இருப்பவர்களுக்கு மனசாட்சியே கிடையாதா... திரும்ப திரும்ப கலைஞரை பெயர் சொல்லி அழைக்கிறார்களே... அவர் வயசுக்காவது மரியாதை கொடுக்க வேண்டாமா...

கலைஞர் நாடகங்களில் நடித்ததை பெருமையாக கருதுகிறேன். தி.மு.க. மேடை நாடகங்களில் அவர் கதாநாயகனாகவும் நான் கதாநாயகியாகவும் நடித்துள்ளோம். அவர் காங்கிரஸ்காரராக வருவார். நான் தி.மு.க. பெண்ணாக வந்து அவர் கேள்விகளுக்கு பதில் சொல்லி அவரை தி.மு.க.வுக்கு மாற வைப்பேன். அந்த நினைவுகள் இன்னும் என் மனதில் உள்ளன, என்றார்.

கனிமொழி எம்.பி., ராமநாராயணன், ஏ.வி.எம். சரவணன், சிவக்குமார், வி.சி. குகநாதன் ஆகியோரும் வாழ்த்திப் பேசினார்கள்.

விழாவில் கலைப்புலி சேகரன், இசையமைப்பாளர் தேவா, டைரக்டர் எஸ்.ஏ. சந்திரசேகரன், தயாரிப்பாளர்கள் முரளிதரன், சிவசக்தி பாண்டியன், காஜா மொய்தீன், அன்பாலயா பிரபாகரன், பெப்சி முரளி, கே.எஸ். சீனிவாசன், எடிட்டர் மோகன், டைரக்டர் அரிராஜன், நடிகைகள் ஜெயதேவி, கார்த்திகா, முன்னாள் எம்.எல்.ஏ. செங்கை சிவம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

டைரக்டர் இளவேனில் வரவேற்றார். தயாரிப்பாளர் ஆறுமுகனேரி எஸ்.பி. முருகேசன், ஜெய முருகன் ஆகியோர் நன்றி கூறினார்கள்.

விழா ஏற்பாடுகளை மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் சிறப்பாக செய்திருந்தார்.

முன்னதாக வடபழனி நூறடி ரோட்டில் ரூ.30 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பெப்சி அலுவலக கட்டிடத்தை முதல்-அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார்.Tags: tamiol, cinema, karunanithi, vivek

No comments:

Post a Comment