புதிதாய் திருமணமான ஜெயம் ரவி - ஆர்த்தி தம்பதியை வாழ்த்த ஆயிரம் ரசிகர்கள் திருச்சியிலிருந்து தங்கள் கைக்காசை செலவழித்து சென்னைக்கு வந்தனர்.
வந்திருந்த ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த அன்புப் பரிசை ஜெயம் ரவி - ஆர்த்தி தம்பதிக்குக் கொடுத்தனர்.
அனைவரையும் வரவேற்ற ஜெயம் ரவியின் தந்தை மோகன் மற்றும் பிஆர்ஓ ஜான், கோடம்பாக்கத்தில் உள்ள எம்எம் திரையரங்கில் அமர வைத்தனர்.
பிற்பகலில் ரசிகர்களைச் சந்திக்க தனது புதுமனைவி ஆர்த்தியுடன் திரையரங்குக்கு வந்தார் ஜெயம் ரவி. தம்பதிகள் உள்ளே நுழைந்ததுதான் தாமதம். தங்கள் கைகளிலிருந்த மலர்களை தம்பதிகள் மீது தூவி வாழ்த்துக்களை ரசிகர்கள் உற்சாகமாக ஒரே குரலில் சொல்ல, அந்த அன்பில் நனைந்து திக்கு முக்காடிப் போனார் ரவி.
திருச்சியிலிருந்து வந்திருந்த ரசிகர்கள் ஒரு அழகான அர்த்தமுள்ள கவிதை எழுதப்பட்ட பெரிய கட்அவுட்டை ஜெயம் ரவி தம்பதிகளுக்கு பரிசளித்தனர்.
ரசிகர்களின் அன்புக்கு நன்றி தெரிவித்த ஜெயம் ரவி, "இந்த அன்புக்கு இணையே இல்லை நண்பர்களே. வாழ்க்கையில் நான் மிக சந்தோஷமாக உணரும் நிமிடம் இதுதான். உங்கள் அன்பில் துளியும் களங்கமில்லை.
நான் வாழ்க்கையி்ல பெரிதாக மதிப்பது என் தாய் தந்தையரை. அம்மா எப்போதுமே எனக்கு ரொம்ப ஸ்பெஷல். என்னை சரியாக புரிந்து கொண்டவர் அம்மா. அதனலாதான் அப்பாகூட எப்போது என்னுடைய விஷயத்தை அம்மாவை விட்டே டீல் பண்ணுவார்.
என் அம்மாவின் இடத்திலிருந்து என்னைப் பார்த்துக் கொள்ள வந்திருக்கும் குட்டி அம்மாதான் ஆர்த்தி, என்றார் நெகிழ்ச்சியுடன்.
ரசிகர்களை அன்புடன் உபசரித்த ஜெயம் ரவியின் தந்தையும் தயாரிப்பாளருமான எடிட்டர் மோகன், அனைத்து ரசிகர்களையும் அவரவர் குடும்பத்தைச் சிறப்பாக பார்த்துக்கொள்ளுமாறு அறிவுரை கூறினார்.
ஜெயம் ரவியின் மாமனார் பேசுகையில், ஜெயம் ரவி இனி எனக்கு மருமகனல்ல... என் மகன் அவர். அவருக்கு ரசிகர்களிடம் உள்ள மரியாதை, ரசிகர்கள் அவர்மீது காட்டும் அன்பைப் பார்க்கும்போது ஏற்பட்ட ஆனந்தத்தை வார்த்தைகளில் விவரிக்க முடியவில்லை என்றார்.
உடனே 'அண்ணி'யைப் பேசச் சொல்லுங்க என ரசிகர்கள் அன்புக் கட்டளை இட, அந்த சத்தத்தில் அரங்கம் அதிர்ந்தது.
ரசிகர்களின் அன்பு வெள்ளத்தில் திக்குமுக்காடிப் போயிருந்த ஆர்த்தி, 'ஜெயம் ரவியை கணவராக அடைந்ததை எனது பெருமையாக நினைக்கிறேன். இந்த மாதிரி ரசிகர்களைப் பார்ப்பது, அவர்களுடன் பேசுவது எல்லாமே எனக்கு மிகப் புதிய அனுபவம். கூடப் பிறக்காத சொந்தங்களாக இங்கே நிற்கும் உங்களுடைய இந்த அன்பை தாங்க முடியவில்லை... உங்கள் அன்புக்கு எனது நன்றி..' என்று சொன்னவர் நெகிழ்ச்சியில் கண்ணீர் விட, வந்திருந்த ரசிகர்களின் கண்களும் குளங்களாகிப் போயின.
வாழ்த்த வந்த அனைவருக்கும் பிரியாணி விருந்தும், அவர்களது குழந்தைகளுக்கு, பேராண்மை படத்தின் டிசைன்கள் அச்சடிக்கப்பட்ட எழுதுபொருட்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் உபகரணங்களையும் பரிசாக வழங்கினர் ஜெயம் ரவி - ஆர்த்தி தம்பதியினர். பின்னர் அனைவரும் ரயில் மூலம் தங்கள் ஊருக்கு கிளம்பிச் சென்றனர்.
இதுவரை எந்த நடிகரின் திருமணத்திலும் இப்படி ரசிகர்கள் தனியாக வரவேற்புக் கொடுத்ததோ, அதில் தம்பதி சமேதராக நட்சத்திரங்கள் கலந்து கொண்டதோ நடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment