நான் அரசியலுக்கு வருவதை எண்ணி அண்ணன் விஜய்காந்த் பயப்படுகிறார் என்று என் அப்பா சொன்னதாக வந்த தகவல்கள் முற்றிலும் உண்மையற்றவை. இதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும், விஜய்காந்தை அந்த செய்தி புண்படுத்தும் என்பதால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்" என்று நடிகர் விஜய் கூறினார்.
விஜய் தனிக்கட்சி துவங்குகிறார் என்று பரபரப்பான செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இதுகுறித்து சில வார இதழ்களுக்கும் அவர் பேட்டியளித்து வருகிறார். நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என்ற ரீதியில்தான் அவரது பதில்கள் அமைந்துள்ளன.
இந் நிலையில், விஜய் அரசியலுக்கு வருவதையெண்ணி விஜய்காந்த் பயப்படுவதாக, விஜய்யின் தந்தை எஸ்ஏ.சந்திரசேகரன் கூறியதாக சில பத்திரிகைகளில் செய்தி வெளியானது.
இது விஜய்காந்த் தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு விஜய் அளித்துள்ள விளக்கம்:
நான் அரசியலுக்கு வர விரும்புவது உண்மையே. அதற்கான ஆலோசனைகளும் நடந்தன. இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.
என்னுடைய ரசிகர்கள் என்மீது மிகப் பெரிய நம்பிக்கையை வைத்துள்ளனர். என் அரசியல் சிறப்பானதாக இருக்க வேண்டும் என்பதற்காக தங்கள் சக்திக்கு மீறிய உதவிகளை அவர்கள் செய்து வருகிறார்கள்.
இந்த நற்பணி மன்றங்களை அரசியல் அமைப்பாக மாற்றி, இன்னும் பெரிய அளவில் ஜனங்களுக்கு உதவணும் என்பது இவர்களின் விருப்பம். அவர்கள் சொல்வதில் உள்ள உண்மையும், நடைமுறை நியாயமும் எனக்குப் புரிகிறது.
என் வளர்ச்சிக்கு காரணமான ரசிகர்களுக்கும், அவர்களின் எதிர்காலத்துக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்று நீண்டகாலமாக எனக்குள் திட்டம் இருந்தது.
அதேபோல் ஒவ்வொரு வீட்டிலும் என்னை குடும்பத்தில் ஒருவனாக நினைக்கும் தமிழக மக்களுக்கு நிறைய நன்மைகள் செய்ய ஆசைப்படுகிறேன். அதனால் அரசியலுக்கு வரவேண்டும் என்ற ரசிகர்களின் வேண்டுகோளில், எனக்கும் உடன்பாடு ஏற்பட்டது உண்டு. நிச்சயம் அரசியலுக்கு வருவேன்.
இது தொடர்பாக ரசிகர்களின் விருப்பத்தை மட்டுமல்லாமல், பொதுமக்களின் கருத்தையும் கேட்டு அறிய விரும்பினேன். இதற்காக சென்னையிலும், சில மாவட்ட தலைநகரங்களிலும் ஆலோசனை கூட்டங்கள் நடந்தன. படித்த இளைஞர்கள், பெண்கள் என பல பிரிவினரிடம் கருத்துக்களை கேட்டு, என் மூளையில் பதிவு செய்து, அதற்கான தகுந்த நேரத்துக்காக காத்திருக்கிறேன்.
எடுத்தேன், கவிழ்த்தேன் என்று உடனடியாக அரசியலில் குதிப்பதிலும், கட்சி தொடங்குவதிலும் எனக்கு உடன்பாடு இல்லை.
மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்..!
சமீபத்தில் என் தந்தை அளித்த ஒரு பேட்டியில், என்னுடைய அரசியல் பிரவேசத்தை நினைத்து விஜய்காந்த் பயப்படுகிறார் என்று கூறியதாக செய்தி வந்துள்ளது.
நிச்சயம் இது உண்மையாக இருக்காது. காரணம் என் வளர்ச்சியில் பெரிதும் அக்கறை கொண்டவர் விஜய்காந்த். சினிமாவில் எனக்கு பல உதவிகளை செய்தவர். அப்பாவின் நீண்டகால நண்பர். அவர் எங்கே, நான் எங்கே? எங்கோ தப்பு நடந்து இருக்கிறது. அதற்காக, நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
அதேபோல வேறு யாருக்கும் நான் போட்டியாகவே, அவர்களின் வளர்ச்சியைத் தடுக்கும் விதத்திலோ இருக்கமாட்டேன். மக்களுக்கு நல்லது செய்யவே நான் அரசியலுக்கு வருகிறேன்... என்றார்.
வரும் 22ம் தேதி இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவிருக்கிறாராம்.
No comments:
Post a Comment