Please Visite here - www.cenimagallary.blogspot.com

Monday, June 15, 2009

டி20 உலகக்கோப்பை - இந்திய அணியும் தோல்விகளும்



ஒரு வழியாக இந்தியாவின் டி20 உலகக்கோப்பைப் பயணம் முடிவுக்கு வந்துவிட்டது. இங்கிலாந்துக்கெதிரான நேற்றையப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் தனது அரையிறுதி வாய்ப்பை கோட்டை விட்டுள்ளது நமது அணி. ரசிகர்கள் பலரும் தொலைக்காட்சியின் முன்னால் அமர்ந்து கொண்டும் நகத்தைக்கடித்து கொண்டும் அரைத்தூக்கத்தை அடக்கிக்கொண்டும் நேற்றைய போட்டியை பார்த்திருந்தால் நிச்சயம் வருத்தமாய் இருந்திருக்கும். பலருக்கும் அப்படித்தான் இருந்தது.

மிக முக்கியமான இந்த போட்டியில் கலந்து கொள்ளும் முன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் யுவராஜ் சிங் மிக திமிராய் இங்கிலாந்தை தோற்கடிப்போம் எனப் பேசியிருந்தார். ஆனால் இங்கிலாந்து நேற்று ஆடியதைப் பார்த்த போது அவர்களது ஆட்டத்திறமையை இந்திய அணியினர் தவறாக கணித்தனரோ என்றே என்னத்தோன்றுகிறது. வெ.இ அணிக்கெதிரான ஆட்டத்திலும் இதுவே நடந்தது என்பது கண்கூடாகத் தெரிந்தது.

இந்த ஆட்டத்தின் தோல்விக்கான காரணங்களை முதலில் பார்த்துவிடுவோம்.

* மிக மோசமான பீல்டிங் ( கடைசி ஓவரில் யுவராஜ்சிங் விட்ட நான்கே அதற்கு சாட்சி )

*இக்காட்டான சூழலில் தேவையில்லாத ரன்களை வாரி வழங்கியது .

*14 எக்ஸ்ட்ராஸ் .

*இர்பான் பதான் மற்றும் ஓஜாவுக்கு பதிலாக ரவீந்தர ஜடேஜாவையும் ஆர்பி சிங்கையும் பயன்படுத்தியது. ஒரு மிக முக்கியமான போட்டியில் ஒரு புதுமுக ஆட்டக்காரரை பயன்படுத்துவது மிகப்பெரியத் தவறு. இர்பான் பதான் இத்தொடரில் சுமாராக பந்து வீசீனாலும் பேட்டில்கில் ஓரளவு பிராகாசித்து வந்தார்.

*ஆட்டத்தின் பதினைந்தாவது ஓவரை நன்றாக பந்து வீசிக்கொண்டிருந்த ஆர்.பி.சிங்கிற்கு பதிலாக இஷாந்தை உபயோகித்ததும் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. அந்த ஓவரில் மஸ்கரனாஸ் பதினைந்து ரன்கள் விளாசியது.

*ரவீந்தர ஜடேஜாவை மூன்றாவதாக களமிறக்கியது . அவருக்கு பதிலாக ஓரளவு ஃபார்மில் உள்ள தோனியோ அல்லது யுவராஜோ இறங்கியிருந்தால் ஆட்டத்தின் போக்கே மாறியிருக்கும். அல்லது அடித்து ஆட வேண்டி அனுப்பியிருந்தால் யூசுப் பதானை அனுப்பியிருக்கலாம். வாழ்வா சாவா போராட்டமான ஒரு போட்டியில் தனது சிறந்த வீரர்களை இறக்கி போராடிப்பார்த்திருக்க வேண்டும்.



இப்படி பல காரணங்கள் இருந்தாலும், இந்திய அணியின் மெத்தனமான ஆட்டமே தோல்விக்கு மிகம்முக்கிய காரணம்.

மேற்ச்சொன்னதெல்லாம் அந்த முக்கிய ஆட்டத்தில் தோற்றதற்கான காரணங்களே. அது தவிர இந்த தொடரில் தோற்றதற்கான காரணங்கள்

*ஐபிஎல் ஆட்டத்தொடரின் அளவுக்கதிகமான கிரிக்கெட் போட்டிகளால் நமது வீரர்கள் சோர்ந்து போயிருந்தனர்.

*அணிக்குள் நடந்ததாக சொல்லப்படும் சேவாக்-தோணி இடையிலான மோதல் , அணியை இரண்டாக பிரித்துவிட்டதாக தெரிகிறது.

*மிக முக்கியமான பந்துவீச்சாளராக கருதிய , காயத்திலிருந்து குணமடைந்த ஜாகீர்கான் ஒரு போட்டியில் கூட பிரகாசிக்காது போனது மிகப்பெரிய சறுக்கல்.

*வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான இங்கிலாந்து பிட்சுகளில் நமது ப.வீக்கள் யாருமே சரியாக பந்து வீசாதது.

*வெஸ்ட் இன்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் இந்திய பேட்ஸ்மேன்களின் பலவீனமான பவுன்சர்களை சரியாக வீசி திணறடித்தது.

*வலுவான பேட்டிங் வரிசையாக கருதப்படும் இந்திய அணியின் பேட்டிங் , இந்த தொடரில் மிக மோசமாக தெரிந்தது. கம்பீர்,ரெய்னா,யுவராஜ்,தோனி,யூசூப் பதான் என யாருமே சோபிக்கத்தவறியதே மிகப்பெரிய இழப்பு.

*சென்ற முறை இந்திய அணியிடமிருந்த துடிப்பும் வேகமும் இந்த முறை மிஸ்ஸிங். ( போன முறை புதியவர்களாய் இருந்த பலரும் இம்முறை நட்சத்திரங்களாகிப்போனது காரணமாய் இருக்கலாம் , அதிலும் கோடீஸ்வர நட்சத்திரங்களாய் ஆகிப்போனது.)

ஆட்டம் முடிந்ததும் தோனி அளித்த பேட்டியில் இந்திய அணியின் இத்தோல்விக்கு தானே பொறுப்பேற்று இந்திய ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாய் தெரிவித்தார். அது தவிர இந்திய அணியின் மோசமான பேட்டிங்கையும் வெகுவாக சாடியிருந்தார். இதுவரை இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தவர்களில் மகேந்திரசிங் தோனியே அனைவரையும் கவர்ந்த மற்றும் வெற்றிகரமான கேப்டனாக இருந்தவர்.அதனால் இந்த சரிவு நிரந்தரமானதல்ல என்பதை நிச்சயம் உணர்ந்திருப்பார்.

இனி வரும் போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுமளவிற்கு நமக்கு அறிவோ அதிகாரமோ கிடையாது எனவே.. இனியாவது கிரிக்கெட்டில் உள் அரசியல் தேவையில்லாத பிரச்சனைகள் , சரியான அணித்தேர்வு , துடிப்பான ஆட்டம் என சென்ற முறை கோப்பையைக்கைப்பற்றிய அணியைப்போல இந்திய அணி ஆக வேண்டும் என்பதே அனைவரது ஆவலும்.

Thanks-
அதிஷா

No comments:

Post a Comment