டெல்லி: ஆஸ்கர் விருது பெற்று தமிழ் கலைஞர்களை உலக அரங்கில் தலைநிமிர வைத்த ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இந்திய அரசு பிரமாண்ட பாராட்டு விழா எடுத்து கவுரவிக்கிறது.
இந்த தகவலை மத்திய அமைச்சர் அம்பிகா சோனி நேற்று அறிவித்தார்.
பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சராக அம்பிகா சோனி பொறுப்பேற்றுள்ளார். இவருக்குக் கீழ் இரு இணையமைச்சர்களாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெகத்ரட்சகனும், மேற்கு வங்கத்தின் சிஎம் ஜதுவாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மூன்று அமைச்சர்களும் முதல் முறையாக நேற்று புதுடெல்லியில் நிருபர்களைச் சந்தித்தனர்.
அப்போது அம்பிகா சோனி கூறியதாவது:
சமீபத்தில் ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், பாடலாசிரியர் குல்ஸார், சவுண்ட் டிஸைனர் ரஸூல் பூக்குட்டி ஆகியோருக்கு மத்திய அரசு சார்பில் விரைவில் பாராட்டு விழா நடத்தப்படும். இவர்கள் இந்தியாவுக்கு சர்வதேச அரங்கில் தனி கவுரம் பெற்றுத் தந்தவர்கள்.
நியாயமாக இந்த விழாவை முன்பே அரசு நடத்தியிருக்க வேண்டும். ஆனால் அப்போது மக்களவை தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருந்ததால் நடத்த முடியவில்லை, என்றார் அம்பிகா சோனி.
ஆஸ்கர் விருது பெற்ற பிறகு ரஹ்மானுக்கு மூன்று டாக்டர் பட்டங்களை சர்வதேச மற்றும் இந்திய பல்கலைக் கழகங்கள் வழங்கியுள்ளன குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment