Please Visite here - www.cenimagallary.blogspot.com

Monday, May 18, 2009

வைரமுத்து மைக் பிடிச்சாரு...

கிரிக்கெட்டுல வேணும்னா ‘ஆட்ட நாயகன்’ வெவ்வேற வீரர்களா இருக்கலாம். ஆனா..கவிப்பேரரசு கலந்துக்கற எந்த கூட்டமானாலும் ‘கூட்ட நாயகன்’ அவரா மட்டும்தான் இருப்பாரு!

‘கொக்கோ கோலா நிறம்..கொட்ற கவிதைகளோ
உலகத்தரம்..இவர் தமிழுக்கு கிடைச்ச தனி வரம்’னு ‘டமுக்கு டப்பா’ கவிதை
பாடி..டமுக்கு அடிச்சு வைரமுத்துவை அறிமுகம் பண்ணவேண்டிய
அவசியம்லாம் இல்லை.



பொத்தாம்பொதுவான விழாவானாலும்..எத்தாம்பெரிய கூட்டம்னாலும் தன்னோட சுட்டுவிரலை சுட்டுப்புடற மாதிரி நீட்டி வைரமுத்து தன் ‘மேக்னட்டு’ குரல்ல பேசற அழகுக்கு ‘நகைநட்டு’ அத்தனையும் அள்ளிக்
குடுக்கலாம்!

‘நல்லது நண்பர்களே..வைரமுத்து பற்றி உங்களுக்கு முக்கியமாக இரண்டு செய்திகள் சொல்ல ஆசைப்படுகிறேன்’னு கவிஞரோட
பாஷையிலேயே ஆரம்பிக்கறேன்.

அண்ணா அறிவாலயம் உள்ளே..கலைஞர் அரங்கத்துல ‘முரசொலி’ அறக்கட்டளை விருது வழங்கும் விழா. முதல்வர் கலைஞர், முக்கிய அமைச்சர்கள்னு பெரும்படையே மேடையிலிருக்கு. ஆளாளுக்கு பேசி கைதட்டலை அள்ள..அத்தனை ‘தட்டலையும்‘ சேர்த்து மொத்தமா ‘தட்டிகிட்டு’
போக.. வைரமுத்து மைக் பிடிச்சாரு...







‘ஒரு வேந்தன் மாதிரி பாத்துகிட்டு காந்தக் குரல்’ல ‘‘நண்பர்களே! நீங்கள் நினைத்து கொண்டிருக்கிறீர்கள்.. தலைவர் கலைஞருக்கு
நான்கு மகன்கள் என்று! ஆனால் உங்களுக்கு உண்மை தெரியுமா..முத்தமிழறிஞர் கலைஞருக்கு மொத்தம் ஐந்து மகன்கள்!’’ என்று சொல்லி நிறுத்த..கூட்டமே திடுக்கிட்டு பாக்க..கலைஞரும் திகைச்சு பாக்க..அரங்கமே கிறங்கி நிக்குது!

‘பிடிபட்டதடா பாஞ்சாலங்குறிச்சி’ங்கற பூரிப்போட
தொடர்ந்து பாஞ்சாரு பாருங்க கவிஞர்..‘‘ஆம் நண்பர்களே! கலைஞருக்கு
மொத்தம் ஐந்து மகன்கள். மூத்தவர்..மு.க.முத்து. அடுத்தவர்..மு.க.அழகிரி.
மூன்றாமவர்..மு.க.ஸ்டாலின். நாலாவது..நம்ம மு.க.தமிழரசு. ஆனால்
இவர்களுக்கெல்லாம் மூத்த அந்த முதல்மகன் யார் தெரியுமா?’’னு மறுபடியும்
கொக்கியை போட..சஸ்பென்ஸ்ல சிக்கித்தவிக்குது கூட்டம்!

இன்னும் பின்றாரு கவிஞர்..‘‘பதினான்காம் வயதிலேர்ந்து கலைஞர் தன்னுடைய தோளில் தூக்கி, மார்பில் தாங்கி வளர்த்த ‘முரசொலி’ பத்திரிகைதான் அவருடைய மூத்தமகன்!’’னு சொல்லி முடிக்க..உணர்ச்சிவசப்பட்ட கலைஞர் கண்ணீர் வடிக்க..அரங்கமே நொறுங்கறமாதிரி கைதட்டல் வெடிக்க..
அப்போ வைரமுத்து பாத்த பார்வை இருக்கே..‘அங்கே பாரதி தெரிந்தான்!’

ரெண்டாவது சங்கதியும் கலைஞர் சம்பந்தப்பட்டதுதான். 2006 மே 11ம் தேதி. தமிழக சட்டமன்றத் தேர்தல் ரிசல்ட். அன்னிக்கு பொழுது விடிஞ்சதுமே கோபாலபுரம் கலைஞர் இல்லத்துக்கு போயிட்டேன். தி.மு.க. கூட்டணி வெற்றியால் கோபாலபுரமே ‘கோலாகல‘புரமானது.

அப்போ நான் ‘குங்குமம்’ பொறுப்பாசிரியர். வெற்றி பெற்ற அந்த முதல் நிமிஷங்கள்ல கலைஞரோட ரியாக்ஷனையும்.சிச்சுவேஷனையும் நேர்ல பாத்தேன். அதைவெச்சு ‘முதல்வரின் முதல் நிமிடங்கள்’னு ஒரு ஸ்பெஷல் ஸ்டோரி பண்ணேன். அந்த நிமிஷங்களை ‘கலைஞர் கூடவே இருந்த கவிப்பேரரசு
விவரிச்சா நல்லா இருக்குமே‘ன்னு வைரமுத்துகிட்டே பேசினேன்.

‘‘நேர அவகாசம் இல்லையே உதயசூரியன்!’’ன்னாரு. விடுவமா? ‘‘இதிகாசம் படைச்சவருக்கு அவகாசம் அவசியமா?’’ன்னேன். நம்ம ‘சகவாசம்‘ தெரிஞ்சு ரசிச்சு சிரிச்சவர்..ஃபோன்லயே அடுக்கடுக்கா விவரிச்சாரு. நானும் அந்த ஸ்பாட்ல இருந்ததால ஜோரா கட்டுரை எழுதி முடிச்சுட்டேன். வைரமுத்துக்கு
ஃபோன்ல படிச்சுக்காட்டறேன்..

‘‘முத்தமிழும் ஆசி கூற..நான்கு திசைகளும் பூத்தூவ..ஐந்தாம் முறையாக முதல்வர் பதவி ஏற்றிருக்கிறார் முத்தமிழறிஞர் கலைஞர்’’னு நான் எழுதின ஓப்பனிங்கை கேட்டதுமே..‘‘உதயசூரியன்..இது நீங்க சொல்வதா? நான்
சொல்வதா?’’ன்னாரு. ‘‘கட்டுரையோட ஆரம்ப வரிகள் சார்’’னேன். ‘‘அப்போ..இதை என் வரிகளாக வாசகர்கள் கருதிவிடக்கூடாது. உங்களுக்கான பாராட்டு
உங்களைத்தான் சேரவேன்டும்’’னு கம்பீரமா சொன்னாரு.

மூணாவது பாராவிலேர்ந்து கவிஞரோட விவரிப்பு
ஆரம்பமாகுது. அந்த பாராவை படிச்சதுமே ‘‘சரியான இடம். நில்லுங்கள். இந்த
பாராவின் தொடக்கத்தில் ‘இதை வைரமுத்துவே தன் வாய்மொழியால் விவரிக்
கிறார்’ என்று போடுங்கள்’’னாரு! சூப்பர்!

கட்டுரை ‘குங்குமத்தில்’ வெளியான நாள்..அதிகாலையிலேயே என் செல் குதித்தது! எடுத்தால்..கவிஞரின் உதவியாளர் பாஸ்கர் ‘‘சார் உங்ககிட்ட பேசறாங்க’’னாரு. பேசினார் வைரமுத்து...‘‘அருமை உதயசூரியன்! என் சொல்பேச்சை செல்பேச்சாக கேட்டு..நீங்கள் எழுதியிருக்கும் கட்டுரை மிகப்பிரமாதம். தலைவர் கலைஞரிடம் இப்போதுதான் பேசினேன். உங்களைப்பற்றி சொன்னேன். மிகவும் பாராட்டினார். விகடன் தயாரிப்பல்லவா நீங்கள்! விரைவாக நிறைவாக செய்திருக்கிறீர்கள்!’’னு அந்த ‘கவிஞர் சிகரம்’ இந்த கூழாங்கல்லை குனிஞ்சு
பாராட்டினதுல மனசே கனிஞ்சுபோச்சு!

No comments:

Post a Comment