பத்திரிகைகளில் பதிவர்களின் சிறுகதைகளோ, கட்டுரைகளோ வெளிவந்தால் தமிழ்மணமே கொண்டாடுகிறது. சம்பந்தப்பட்ட பதிவரிடம் ‘பார்ட்டி’ கேட்கிறது. உண்மையில் அதற்குரிய சன்மானமாக பத்திரிகைகளிடம் இருந்து எவ்வளவு கிடைத்தது என்பதை சம்பந்தப்பட்ட பதிவர்கள் கவுரவம் கருதி வெளியே சொல்வதில்லை. போனவாரம் கூட ஒரு பிரபல பத்திரிகை எனக்கு ரூபாய் எழுபத்தி ஐந்து மணியார்டர் அனுப்பி வைத்தது. பத்திரிகைகளில் எழுதி சம்பாதிக்க முடியும் என்ற நிலை இருந்தால் சாகித்திய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் வறுமையில் இன்றொரு முதியோர் இல்லத்தில் அனாதை போல வாடுவாரா?
தினமலர் வாரமலர் எழுத்தாளர்களுக்கு சொல்லிக்கொள்ளும்படியான நல்ல சன்மானம் வழங்குகிறது என்று நினைக்கிறேன். விகடன் குழுமம் வாசகர்களுக்கு அவ்வப்போது பரிசாக வழங்கும் தொகை மிகப்பெரியது. அதெல்லாம் வேற பாலிட்டிக்ஸ், விடுங்க.
பத்திரிகையில் கூட எழுதவேண்டாம், உங்கள் வலைப்பூவில் சிறப்பாக ஒரு கதை எழுதினாலே ரூ.ஆயிரத்து ஐநூறு தர முன்வந்திருக்கிறார் அண்ணன் பைத்தியக்காரன். மொத்தம் இருபது சிறுகதைகளை தேர்ந்தெடுத்து ரூபாய் முப்பதாயிரம் (தன் சொந்தப்பணத்தை) வழங்க முன்வந்திருக்கிறார். இதற்காக அவருக்கும், அவரது சமூக கலை இலக்கிய அமைப்புக்கும் வாழ்த்துகள்!
தேர்ந்தெடுக்கப்படும் இருபது கதைகளை கிழக்குப் பதிப்பகத்தின் மூலமாக ஒரு நூலாக உருவாக்கித்தர பதிப்பாளர் பத்ரி முன்வந்திருக்கிறார். எனவே போட்டியில் கலந்துகொள்பவர்கள் அக்கதை தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் நூலாக வெளிவருவதற்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும். எனினும் அந்தந்த சிறுகதைகள் அந்தந்த படைப்பாளிக்கே சொந்தம்.
போட்டிக்கான விதிமுறைகள் மற்றும் விபரங்கள் :
1. உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பின் சார்பாக சிறுகதை போட்டி. ('போட்டி என்பது அதிகாரத்தின் உரையாடல் அல்லவா?' எனக் கேட்கும் வேதாளத்தின் கேள்விக்கு விக்கிரமாதித்தன் சொன்ன பதில் என்னவாக இருக்கும்?)
2. முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு, ஆறுதல் பரிசுகள் என்றெல்லாம் எதுவும் கிடையாது.
3. மொத்தம் 20 சிறுகதைகள் தேர்ந்தெடுக்கப்படும். கதை ஒன்றுக்கு ரூபாய் 1,500 வீதம், 20 சிறுகதைகளுக்கும் சரிசமமாக பரிசுத்தொகை அனுப்பப்படும்.
4. வலைப்பதிவுகளில் எழுதுபவர்கள் மட்டுமே இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம். குறைந்தது 3 பதிவுகளை எழுதிய வலைப்பதிவாளர்களாக இருக்கவேண்டும்.
5. ஒருவர் ஒரு சிறுகதையை மட்டுமே அனுப்ப வேண்டும். ஒருவரே இரண்டு அல்லது மூன்று வலைத்தளங்களை வைத்திருந்தால், வலைத்தளத்துக்கு ஒன்று வீதம் கதைகளை அனுப்பலாம்.
6. சிறுகதையானது ஆயிரம் வார்த்தைகளை தாண்டக் கூடாது. இதற்கு முன் எழுதியதாகவோ, மீள் பிரசுரம் செய்ததாகவோ, அச்சில் வந்ததாகவோ, இன்னொருவரின் படைப்பை அடிப்படையாகக் கொண்டதாகவோ இருக்கக் கூடாது.
7. போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்படும் வரையில் வேறு இதழ்களுக்கு, போட்டிக்காக அனுப்பிய சிறுகதையை அனுப்பக் கூடாது.
8. இந்திய நேரப்படி, 16.05.2009 அதிகாலை 1 மணி முதல், ஜூன் 30ம் தேதி இரவு 12 மணி வரை எழுதப்பட்ட சிறுகதைகளாக இருக்க வேண்டும். எழுதிய கதைகளை தங்கள் வலைத்தளத்தில் அவர்கள் பிரசுரிக்க வேண்டும். அப்படி வலைத்தளத்தில் ஏற்றும்போது, இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது என்பதை குறிப்பிட்டு, இந்தப் பதிவின் லிங்கைத் தர வேண்டும்.
8. சிறுகதை பிரசுரமான தளத்தின் லிங்கை எங்களுக்கு மெயிலில் தெரியப்படுத்தினால் போதும். அப்படி அனுப்பும்போது உங்களது முகவரியையும், தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் எந்தப் பெயருக்குக் காசோலை அனுப்ப வேண்டும் என்பதையும் குறிப்பிட்டு, நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவதாக ஒரு உறுதிமொழியையும் மெயிலில் அனுப்பவேண்டும்.
9. மெயில் முகவரி: sivaraman71@gmail.com
10. வெளிநாட்டு பதிவர்களும் போட்டியில் கலந்து கொள்ளலாம். ஆனால், தவிர்க்க இயலாத காரணத்தினால், காசோலை இந்திய முகவரிக்கு மட்டுமே அனுப்பி வைக்கப்படும். எனவே இந்தியாவில் வங்கிக் கணக்கை வைத்திருக்கும் உறவினர்கள் அல்லது நண்பர்களின் விலாசத்தை தருவது நல்லது.
11. நகைச்சுவை, க்ரைம், காதல், மாஜிக்கல் ரியலிஸம், அறிவியல் புனைவு இத்யாதி, இத்யாதி ... என எந்த வகையிலும் சிறுகதைகளை எழுதலாம். பரிசோதனைகள் செய்யலாம். யதார்த்தமாகவும் எழுதலாம். அ - யதார்த்தமாகவும் வார்த்தைகளைச் சுழற்றலாம்.
12. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது. நடுவர்கள் யார் என்பது இன்னும் 15 நாட்களுக்குள் அறிவிக்கப்படும்.
13. இந்த அறிவிப்பை உலகெங்கும் அறிவிக்கப் போகும் தமிழ்மணம், தமிழ்வெளி, தமிழ்மானம், தமிழிஷ், திரட்டி, மாற்று மற்றும் முகம் தெரியா அனைத்து பதிவுலக திரட்டிகளுக்கும் நன்றி.
14. இது குறித்த ஆலோசனைகளும், விமர்சனங்களும் பின்னூட்டத்தில் வரவேற்க்கப்படுகின்றன.
15. போட்டியின் முடிவு ஜூலை 15ம் தேதி அறிவிக்கப்படும்.
தோழமையுடன்
உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு சார்பாக,
பைத்தியக்காரன் : 9840907375
No comments:
Post a Comment