கம்ப்யூட்டர் என்ஜீனியரை மணக்கிறார் நடிகை மீனா. இந்தத் திருமணத்துக்கான நிச்சயதார்த்தம்ம் கூட, சத்தமில்லாமல் முடிந்து விட்டது.
மீனா செட் நடிகைகளில் பலருக்கும் திருமணமாகி விட்டது. மீனா மட்டும்தான் பாக்கி. நடக்குமா, நடக்காதா என்று பட்டி மன்றம் வைக்கும் அளவுக்கு அவரது கல்யாணம் குறித்த எதிர்பார்ப்பு நீண்டு கொண்டே போனது. ஒரு வழியாக மீனாவுக்கு இப்போது கல்யாணம் நிச்சயமாகி விட்டது.
மீனாவை மணக்கப் போகும் 'பாண்டியனின்' பெயர் விச்யா சாகர். பெங்களூரைச் சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர். பெற்றோர் பார்த்து நிச்சயம் செய்து வைத்த திருமணமாம் இது.
நிச்சயதார்த்த நிகழ்ச்சி, சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மீனா வீட்டில் நடந்தது. நெருங்கிய உறவினர்களும், நடிகைகள் சங்கவி, ஸ்ரீதேவி ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.
ஜுலை மாதம் 12-ந் தேதி, திருப்பதியில் திருமணம் நடக்கிறது. ஜூலை 14-ம் தேதி சென்னையில் பிரமாண்ட வரவேற்பு நடக்கிறது.
எஜமான் நாயகி...
சிவாஜிகணேசன் நடித்த நெஞ்சங்கள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், மீனா. 'ஒரு புதிய கதை' என்ற படத்தின் மூலம் கதாநாயகி ஆனார். தொடர்ந்து, 'என் ராசாவின் மனசிலே' படத்தில் ராஜ்கிரண் ஜோடியாக நடித்தார்.
பின்னர் ரஜினிகாந்த் ஜோடியாக அவர் 'எஜமான்' படத்தில் நடித்ததால், நம்பர் ஒன் நாயகியானார். தொடர்ந்து முத்து, வீரா போன்ற ரஜினியின் படங்களில் நாயகி அவரே. கமல் ஹாசன் ஜோடியாக அவ்வை சண்முகி உள்பட ஏராளமான தமிழ் படங்களிலும், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார்.
சின்னத்திரையையும் விட்டு வைக்காத மீனா லட்சுமி என்ற தொடரில் நடித்தார். தற்போது கல்யாணம் என்ற தொடரில் நடித்து வருகிறார். இதில் நடிக்க ஆரம்பித்ததும் அவருக்கு கல்யாணம் செட் ஆகி விட்டது குறிப்பிடத்தக்கது.
"திருமணத்துக்குப் பிறகும் கண்டிப்பாக தொடர்ந்து நடிப்பேன். சினிமாவில் நல்ல வேடங்களிலும், சின்னத் திரை சீரியல்களிலும் தொடர்ந்து நடிப்பேன்" என்று கூறியுள்ளார் மீனா.
No comments:
Post a Comment