நடிகை மீரா ஜாஸ்மினைக் காதலிப்பதாகவும், அவருடன் விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாக வரும் செய்திகளை மறுத்துள்ளார் நடிகர் பிரசாந்த்.
ஆனால் பிரசாந்த், யாரை வேண்டுமானாலும் காதலிக்கலாம்... திருமணம் செய்து கொள்ளலாம்... நான் குறுக்கே நிற்க மாட்டேன் என்கிறார் அவரது தந்தை தியாகராஜன்.
நடிகர் பிரசாந்துக்கும் தொழில் அதிபர் மகள் கிரகலட்சுமிக்கும் நடந்த திருமணம் செல்லாது என குடும்ப நல கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பு குறித்து பத்திரிகையாளர்களுக்கு இன்று பேட்டியளித்தார் பிரசாந்த்.
அவர் கூறியதாவது:
இந்தத் தீர்ப்பு பெரும் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அளிக்கிறது. அதே நேரம், எனக்குப் பிறந்த குழந்தை கிரகலட்சுமி வீட்டில் வளர்வது வருத்தமாக உள்ளது. காரணம் அவர்கள் வீட்டில் ஒழுங்காக வளருமா என்ற சந்தேகம் எனக்கு உள்ளது.
மீரா ஜாஸ்மினை நான் காதலிப்பதாக வரும் செய்திகளில் உண்மையில்லை. அப்படி ஒரு காதல் எனக்கு வந்தால் நிச்சயம் உங்களுக்குச் சொல்வேன்.
ரொம்ப நொந்துபோன மனநிலையில் உள்ளேன். கிரகலட்சுமியால் நான் கடந்த 4 ஆண்டுகளாகப் பட்ட அவமானம் கொஞ்சமல்ல. எவ்வளவு மிரட்டல், எத்தனை வழக்குகள்... என்னிடம் ரூ.50 கோடி பணம் கேட்டு மிரட்டிக்கூடப் பார்த்தார்கள். இருந்தும் நான் சேர்ந்து வாழவே விரும்பினேன். ஆனால் 1998-ல் நாராயணன் வேணு பிரசாத் என்பவருடன் கிரகலட்சுமிக்கு திருமணம் நடந்ததாக எனக்கு ஆதாரப் பூர்வமாகக் கிடைத்த தகவல் நிஜமாகவே பெரும் அதிர்ச்சியைத் தந்தது எனக்கு.
அதன் பிறகுதான் திருமணம் செல்லாது என அறிவிக்கும்படி புது வழக்கு போட்டேன். நீதி வென்றுவிட்டது. இனி படங்களில் ஒரு புதிய பிரசாந்தைப் பார்க்கலாம் என்றார் பிரசாந்த்.
பிரசாந்துக்கு மறு திருமணம் செய்து வைப்பீர்களா என பிரசாந்தின் தந்தை தியாகராஜனிடம் கேட்டோம். அதற்கு அவர், நீங்கள்லாம் என்னமோ காதல் என்றெல்லாம் கூறினீர்கள். உண்மையிலேயே அவருக்கு காதல் வந்திருந்தாலும், காதலிப்பவரையே அவர் கல்யாணம் செய்து கொள்ள விரும்பினாலும் கூட நான் குறுக்கே நிற்க மாட்டேன். நிறைய கஷ்டப்பட்டு அவர் போதிய பக்குவம் பெற்றுவிட்டார்என்றார் தியாகராஜன்.
No comments:
Post a Comment