Please Visite here - www.cenimagallary.blogspot.com

Tuesday, May 26, 2009

டெக்கான் சார்ஜர்ஸ் வெற்றிக்கு காரணம் கில்கிறிஸ்ட்: அஃப்ரிடி

தென்ஆப்ரிக்காவில் நடந்த இந்தியன் பிரீமியர் லீக் இருபது-20 கிரிக்கெட் போட்டித் தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றதற்கு, அணித்தலைவர் கில்கிறிஸ்டின் சிறப்பான செயல்பாடுகளே காரணம் என பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ஷாஹித் அஃப்ரிடி கூறியுள்ளார்.

இந்தியாவில் நடந்த முதலாவது ஐ.பி.எல் தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் விளையாடிய அஃப்ரிடி, அப்போதைய அணித்தலைவர் லக்ஷ்மனுக்கு பதிலாக கில்கிறிஸ்டை தலைவராக நியமிக்கலாம் எனக் கருத்துத் தெரிவித்தார். இதன் காரணமாக அவர் சர்ச்சையில் சிக்கினார்.

இந்நிலையில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக தென்ஆப்ரிக்காவில் நடந்த ஐ.பி.எல். இறுதிப்போட்டியில், கில்கிறிஸ்ட் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணி சிறப்பாக விளையாடி சாம்பியன் பட்டம் வென்றது.

இதுபற்றி தற்போது பேசியுள்ள அஃப்ரிடி, அணித்தலைவராக இருந்த லக்ஷ்மனுக்கு பதிலாக கில்கிறிஸ்டை நியமிக்க வேண்டும் எனக் கூறிய போது என்னை எல்லோரும் தவறாகக் கருதினர்.

ஆனால் பரபரப்புக்கு பஞ்சமில்லாத இருபது-20 போட்டிகளுக்கு லக்ஷ்மனின் தலைமை சரியாக வராது என்ற நோக்கத்தில்தான் அப்படிக் கூறினேன். தனிப்பட்ட முறையில் எனக்கும், லக்ஷ்மனுக்கும் எந்தவித மனஸ்தாபமும் கிடையாது. லக்ஷ்மன் சிறந்த டெஸ்ட் வீரர் என்பதில் சந்தேகமில்லை.

முக்கியமான கட்டங்களில் அதிரடியான அதேசமயம் மதிநுட்பமான முடிவுகளை எடுப்பதில் கில்கிறிஸ்ட் சிறப்பாக செயல்படுகிறார்.

கடந்தாண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் விளையாடிய பெரும்பாலான வீரர்கள், தென்ஆப்ரிக்காவில் நடந்த போட்டியிலும் பங்கேற்றனர். கடந்தாண்டு சோபிக்கத் தவறிய டெக்கான் சார்ஜர்ஸ் அணி, தென்ஆப்ரிக்காவில் சாம்பியன் பட்டம் வென்றதற்கு முழுமுதற் காரணம் கில்கிறிஸ்டின் தலைமைப் பண்புகள்தான் என அஃப்ரிடி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment