மணிரத்னம் இயக்கும் மெகா படமான ராவண் படத்துக்கு (தமிழில் அசோகவனம்) சோதனைகள் தொடர்கின்றன. இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் மணிகண்டன் பாதியில் விலகிக் கொண்டதால், இப்போது புதிய ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் பணியாற்றுகிறார்.
இதுவரை எடுத்த காட்சிகளைப் போட்டுப் பார்த்த மணி ரத்னம் மற்றும் சந்தோஷ் சிவன் இருவருக்குமே திருப்தி இல்லாததால், மீண்டும் அவற்றை ரீஷூட் செய்யத் திட்டமிட்டுள்ளார்களாம். இதனால் ஏற்கெனவே பல காரணங்களால் தாமதமாகிவிட்ட ராவண் படம் எப்போது முடியும் என்றே தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஒளிப்பதிவாளர் மணிகண்டன் தினச் சம்பளம் அடிப்படையில் பணியாற்றுபவர். விளம்பரப் படங்களில் அவருக்கு நல்ல வருமானம். இந்தியில் பிஸியான கேமரானமேன் இவர்தான்.
இவரை ராவண் படத்துக்கு விரும்பி அமர்த்தினார் மணிரத்னம். ராவண் படத்துக்கு 100 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருந்தார் மணிகண்டன். ஆனால் 100 நாட்கள் தாண்டியும் படத்தில் பாதிகூட முடியவில்லையாம். கேரள வனத்துறையினரால் பிரச்சினை, மணிரத்னம் திடீர் உடல் நலக் குறைவால் படப்பிடிப்பை தொடர முடியாமல் போனது போன்ற காரணங்களால் படம் பெருமளவு தாமதமானது.
படத்தின் நாயகி ஐஸ்வர்யா ராய் கொடுத்த கால்ஷீட் முடிந்துவிட்டாலும் மணிரத்னத்துக்காக மேலும் இருமாதங்கள் கால்ஷீட்டை நீட்டிக்க அவர் ஒப்புக் கொண்டுள்ளார். விக்ரம் போன்ற மற்ற கலைஞர்களும் சூழல் புரிந்து ஒத்துழைக்கத் தயாராக இருந்தனர். ஆனால் மணிகண்டன் மட்டும் விலகிக் கொள்வதாக அறிவித்துவிட்டார்.
இந்த இக்கட்டான சூழலில், மணிரத்னத்தின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான சந்தோஷ் சிவன் கைகொடுத்துள்ளார்.
இப்போது காட்சிகளை மறுபடியும் போட்டுப் பார்த்த மணிரத்னம் மற்றும் சந்தோஷ் சிவனுக்கு, இன்னும் பெட்டராக எடுத்திருக்கலாமே என்ற எண்ணம் மேலோங்கிவிட, பல காட்சிகளை மறுபடியும் சுடப் போகிறார்களாம்.
No comments:
Post a Comment