ஏவி.எம். தயாரித்து, அதை சன் பிக்சர்ஸ் வாங்கி வெளியிட்ட அயன் படம் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறதாம். இதுவரை ரூ. 50 கோடி வசூலைத் தொட்டு சாதனை படைத்துள்ளதாம்.
ஐபிஎல் போட்டிகள் ஒருபக்கம், மறுபக்கம் லோக்சபா தேர்தல் பரபரப்பு என இரு பக்க மிரட்டல்கள் இருந்தபோதிலும் கூட அதைத் தாண்டி அயன் படத்திற்கு பெரும் வரவேற்பும், பிரமாண்ட வசூலும் கிடைத்திருப்பதால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகமும் கூட பெரும் சந்தோஷமாகியுள்ளனவாம்.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவான அயன் படத்தில் சூர்யா, தமன்னா ஜோடியாக நடித்துள்ளனர். திரையிட்ட இடமெல்லாம் திருவிழாக் கூட்டமாம். வசூல் மழை இன்னும் ஓயவில்லையாம்.
இதுவரை வெளியான தமிழ்த் திரைப்படங்களிலேயே குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய வசூலைக் கொடுத்த படம் அயன்தான் என திரையுலகில் கூறுகிறார்கள்.
விரைவில் படத்தின் வசூல் ரூ. 50 கோடியையும் தாண்டி ஓடி விடும் என்கிறார்கள்.
தமிழகத்தில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் கூட அயன் படத்திற்கு பிரமாதமான வரவேற்பு கிடைத்துள்ளதாம். ஏப்ரல் 3ம் தேதி இப்படம் திரைக்கு வந்தது.
இதுகுறித்து சன் பிக்சர்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா கூறுகையில், இது கோடை கால விருந்தாக அமைந்துள்ளது. அனைத்துப் பிரிவு ரசிகர்களையும் குறிப்பாக பெண்கள், குழந்தைகளையும் அயன் கவர்ந்துள்ளதுதான் இதன் வெற்றிக்குக் காரணம்.
மேலும் படத்திற்கு திரும்பத் திரும்ப வரும் ரசிகர்களும் அதிகம் கிடைத்துள்ளனர். இது சமீப காலத்தில் திரையுலகில் அரிதானதாகும் என்றார்.
ஏவி.எம் நிறுவனம்தான் இந்தப் படத்தை முதலில் தயாரித்தது. பின்னர் சன் பிக்சர்ஸ் படத்தை ஒட்டுமொத்தமாக வாங்கி விட்டது. ரூ. 18 கோடி கொடுத்து படத்தை வாங்கியதாக கூறப்படுகிறது.
படத்தின் சாட்டிலைட் உரிமையை மட்டும் வைத்துக் கொண்டு தியேட்டர் வெளியீட்டு உரிமையை விநியோகஸ்தர்களிடம் வழங்கியது சன்.
சிவாஜி - தசாவதாரத்தை நெருங்குகிறது..
அயன் பட வசூல் குறித்து ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் விநியோகப் பிரிவு தலைவர் மகாலிங்கம் கூறுகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சிவாஜி படத்தின் முக்கால்வாசி வசூலை அயன் தொடும் என எதிர்பார்க்கிறோம்.
அதேபோல, கமல்ஹாசன் நடித்த தசாவதாரம் படத்தின் 80 முதல் 85 சதவீத வசூலை அயன் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை வந்துள்ள வசூலைப் பார்க்கும்போது ரூ. 50 கோடிக்கும் மேல் அயன் வசூலிக்கும் என உறுதியாக தெரிகிறது என்றார்.
படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகி விட்டன. மேலும் தயாரிப்பும் சிறப்பாக இருந்ததும், சண்டைக் காட்சிகள் வித்தியாசமாக படமாக்கப்பட்டதும்தான் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு முக்கிய காரணம். சூர்யாவின் படங்களிலேயே மிகப் பிரமாண்டமான வசூல் படம் அயன் என்பதில் சந்தேகம் இல்லை என்கிறார் கோவை பிராந்தியத்தைச் சேர்ந்த முன்னணி விநியோகஸ்தரான திருப்பூர் சுப்ரமணியம்.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் படத்தை விற்று, லண்டனைச் சேர்ந்த ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனத்திடம் ஓவர்சீஸ் உரிமையை விற்ற ஏவி.எம். நிறுவனம், இப்படத்தின் தெலுங்கு உரிமையை தன்னிடமே வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஆந்திராவில் அயன் படத்தின் தெலுங்கு டப்பிங் பதிப்பு (பெயர் வீடோக்கடே) மே 1ம் தேதி வெளியாகிறது.
சூர்யாவுக்கு தெலுங்கிலும் பெரும் ரசிகர் கூட்டம் இருப்பதால், வீடோக்கடே படமும் ஹிட் ஆகும் என நம்பப்படுகிறது.
No comments:
Post a Comment