பெரியவங்களை மதிக்கக் கத்துக்கணும்! -ரஜினி
அஜீத்துக்கு இப்போது ஒரு வெற்றி நிச்சயம் தேவை. அதுவும் அவரது 50 வது படம் இது, நிச்சயம் பெரிய வெற்றி கிடைக்கும். என்னுடைய வாழ்த்துக்கள் என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினி.
அசல் பட பூஜை மற்றும் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேச்சை அப்படியே தருகிறோம்:
“என் குருநாதர் கேபி சார் அவர்களே, ‘அசல்’ ஹீரோ அஜீத் மற்றும் அவரது ரசிகர்களே (விசில் பறக்கிறது), திரையுலகப் பெருமக்களே…
என் நண்பர் வைரமுத்து சொன்னதுபோல, இந்த அரண்மனையிலிருந்துதான் அந்த நடிப்புச் சக்கரவர்த்தி பாலும் பழமும், பாசமலர், திருவிளையாடல் போன்ற காவியங்களில் நடிக்கப் புறப்பட்டுப் போயிருப்பார். அந்த மாமனிதர் வாழ்ந்த அன்னை இல்லத்துக்கு வந்து போவது என் மனதுக்கு உகந்த விஷயம். இந்த அன்னை இல்லம் தமிழ் திரையுலகம்… ஏன் தென்னாட்டு திரையுலகுக்கே தாய்வீடு!
இத்தனை ஆண்டுகளில் நானும் சவுந்தர்யாவும் ஒன்றாக சேர்ந்து எந்தப் பட விழாவுக்கும் போனதில்லை. அதனால் நேத்தே சௌந்தர்யா கிட்டே சொல்லிட்டேன், நாளைக்கு நாம முதல் ஆளா அசல் பட பூஜைக்குப் போகலாம், என்று.
சந்திரமுகி படத்துக்கும் இங்குதான் பூஜை போட்டோம், ஆனா சிம்பிளாக. இப்போது அசல் படத்துக்கு நல்ல பிரமாண்டமாக அதே இடத்தில் பூஜை போடுகிறார் பிரபு. படம் எந்த அளவு வெற்றிப் படமா வரும் என்பதற்கு இந்த பூஜையே ஒரு சாட்சி.
ராம்குமார் மற்றும் பிரபு இருவருமே மிக அற்புதமான தயாரிப்பாளர்கள். இப்படித்தான் இருக்கணும். தங்கள் தந்தையின் புகழை, பெருமையை, இந்தக் குடும்பத்தின் பெயரை அப்படியே காத்து வருகிறார்கள். அது பெரிய விஷயம். என் பசங்களுக்கு அடிக்கடி சொல்வேன், இவர்களைப் போல வரணும், பெரியவங்களை மதிக்கக் கத்துக்கணும்னு.
சந்திரமுகி படம் எடுத்தப்போ, என்னைவிட அதிக டென்ஷன் ஆனவர்கள் ராம்குமார்-பிரபுதான். பாபா சரியா போகாத அந்த சூழ்நிலையில் படம் பண்ணுகிறோம். அண்ணே, இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெறும், நாங்க பாத்துக்கறோம். நீங்க கவலைப் படாதீங்கன்னு சொல்லி அருமையாக தயாரித்து, பிரமாண்ட வெற்றி பெற வைத்தார்கள்.
அதற்குப் பிறகு அஜீத்தை வைத்து இந்தப் படம் தயாரிக்கிறார்கள். நிச்சயம் இது வெற்றி பெறும். அஜீத்துக்கும் இப்போது ஒரு வெற்றி தேவை. இது அவரது 50வது படம். அஜீத்.. கவலைப்படாதீங்க, நல்ல இடத்துக்கு வந்திருக்கீங்க. நல்ல தயாரிப்பாளர்கள் இருக்காங்க. நல்ல வெற்றியைப் பெறுவீங்க. நிச்சயம் இந்தப் படத்தின் வெற்றி விழாவில் நான் இருப்பேன்.
இந்தப் படத்தின் இயக்குநர் சரண், கமர்ஷியல் அண்ட் க்ளாஸ் ரக படங்களைத் தருவதில் கைதேர்ந்தவர். மிகப் பெரிய வெற்றி பெறும். வாழ்த்துக்கள், என்றார் சூப்பர் ஸ்டார்.
விழா முடிந்து அஜீத்துடன் சில நிமிடங்கள் பேசிவிட்டு, மின்னலாய் கிளம்பினார் ரஜினி. அவரது கார் போக் ரோட்டை விட்டு மறையும் வரை ரசிகர்கள் ஆரவாரம் தொடர்ந்தது!
அது!!
No comments:
Post a Comment