நடிகர் திலகம்' சிவாஜிகணேசனுக்கு சொந்தமான பட நிறுவனம், சிவாஜி புரொடக்ஷன்ஸ். இந்த நிறுவனத்தின் பொன்விழா ஆண்டையொட்டி, ரஜினிகாந்தை வைத்து, `சந்திரமுகி' படத்தை சிவாஜியின் மகன் நடிகர் பிரபு தயாரித்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
அதையடுத்து, அஜீத்குமாரை வைத்து `அசல்' என்ற படத்தை சிவாஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரபு தயாரிக்கிறார். இந்த படத்தின் தொடக்க விழா, சென்னை தியாகராயநகரில் உள்ள அன்னை இல்லத்தில் (சிவாஜிகணேசன் வீடு) நடந்தது.
விழாவில் பட அதிபர் ஏவி.எம்.சரவணன், டைரக்டர்கள் கே.பாலசந்தர், பி.வாசு, கவிஞர் வைரமுத்து, நடிகர்கள் சத்யராஜ், சூர்யா, கார்த்தி, அருண்பாண்டியன், சின்னிஜெயந்த், இசையமைப்பாளர் பரத்வாஜ் உள்பட ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்துகொண்டார்கள்.
`அசல்' படத்தின் டைரக்டர் சரண் வரவேற்று பேசினார். நடிகர் யூகி சேது நன்றி கூறினார்.
விழாவில், ரஜினிகாந்த் தனது இளைய மகள் சவுந்தர்யாவுடன் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினார்.
அப்போது, ‘’இங்கே வைரமுத்து பேசியதுபோல், இந்த வீட்டில் இருந்துதான் `வீரபாண்டிய கட்டபொம்மன் படத்துக்காக சிவாஜி சார் புறப்பட்டு போய் இருப்பார். `திருவிளையாடல்' படத்துக்காக புறப்பட்டு போய் இருப்பார். தமிழ் திரையுலகுக்கு மட்டுமல்ல, தென்னிந்திய திரையுலகுக்கே தாய் வீடு, இந்த அன்னை இல்லம்தான்.
நான், என் மகளை அழைத்துக்கொண்டு வந்த முதல் நிகழ்ச்சி இதுதான். சவுந்தர்யாவிடம் நேற்றே கூறிவிட்டேன். நாளை, சிவாஜி சார் வீட்டுக்கு போகவேண்டும். தயாராக இரு என்று. அதன்படி, முதன்முதலாக என் மகளுடன் அன்னை இல்லத்துக்கு வந்து இருக்கிறேன். இது, ராசியான இடம்.
என் குடும்பத்தினர் மீது பாசம் கொண்டவர்கள், சிவாஜி சார் குடும்பத்தினர். இதுபற்றி நான் என் பிள்ளைகளிடம் எடுத்து சொல்லியிருக்கிறேன்.
`சந்திரமுகி' படத்தின் தொடக்க விழா, இதே வீட்டில் எளிமையாக நடந்தது. அப்போது தாய் கமலா அம்மாள் இருந்தார்கள். இப்போது அவர்கள் இல்லை என்பது வருத்தமாக இருக்கிறது.
`அசல்' படத்தின் வெற்றி இந்த தொடக்க விழாவிலேயே தெரிகிறது. நிச்சயமாக இந்த படம் வெற்றி பெறும். வெற்றி விழாவில் நான் கலந்துகொள்வேன்.
ராம்குமாரும், பிரபுவும் சிவாஜி என்ற `ஆசான்' பெயரை காப்பாற்றி வருகிறார்கள். `சந்திரமுகி' படத்தை தயாரித்தபோது, என்னை விட `டென்ஷன்' ஆக இருந்தவர்கள் ராம்குமாரும், பிரபுவும்தான். அப்போது, `பாபா' படம் வந்து தோல்வியை தழுவிய நேரம். `சந்திரமுகி'யை வெற்றி படமாக்க வேண்டும் என்பதில் ராம்குமாரும், பிரபுவும் முழு பொறுப்பு எடுத்துக்கொண்டு உழைத்தார்கள். வெற்றி பெற்றார்கள்.
அஜீத், நல்ல இடத்துக்கு வந்திருக்கிறார். அவருக்கு இந்த படம் நிச்சயமாக வெற்றி படமாக அமையும்.'' என்றார்.
No comments:
Post a Comment