Please Visite here - www.cenimagallary.blogspot.com

Monday, April 6, 2009

கூகுள் மேப் காருக்கு கடும் எதிர்ப்பு

லண்டன்: கூகுள் மேப் காரால் தங்கள் தனிமை கெட்டுப் போவதாகக் கூறி அதைத் தொடர்ந்து படம் பிடிக்க விடாமல் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர் பிரிட்டிஷ் கிராம மக்கள்.

'கூகுள் மேப்ஸ் கார்' எனும் பெயரில் கூகுள் நிறுவனம் பிரிட்டன் தெருக்கள் முழுவதையும் படம் பிடித்து ஆன்லைனில் காட்டி வருகிறது. இதன் அடிப்படையில் கூகுள் மேப்களைத் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளது. இதற்காக பிரிட்டனின் கிராமங்களை 360 டிகிரி கோணத்தில் சுற்றிச் சுழன்று படம்பிடித்து வருகிறது இந்த கூகுள் கார். இந்தக் காருக்கு மேலே நவீன கேமரா பொருத்தப்பட்டு படமாக்கப்பட்டு வருகிறது.

இந்தக் காரால் தங்கள் தனிமை கெட்டுப் போவதோடு, திருடர்களுக்கும் வழிகாட்டிக் கொடுப்பதுபோல உள்ளதாக பிரிட்டன் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பக்கிங்காம்ஷையர் அருகே உள்ள பிராட்டன் கிராமப் பகுதியில் கடந்த புதனன்று இந்தக் கார் படம் பிடித்துக் கொண்டிருந்தபோது, கடுப்பாகிப் போன கிராமவாசிகள் போலீசாரை வரவழைத்து விட்டனர்.

இந்த மாதிரி தங்கள் ஊர்களையும் தெருக்களையும் அதிலுள்ள வீடுகளையும் அணுஅணுவாக படம் பிடித்துக் காட்டுவது திருடர்களுக்கு அழைப்பு விடுப்பதற்குச் சமம் என்றும், கடந்த ஒரே வாரத்தில் மட்டும் தங்கள் கிராமத்தில் 3 கொள்ளைகள் நடந்துள்ளதாகவும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.

மேலும் இந்தக் காரின் கேமரா, தெருக்களோடு நின்று விடாமல், வீட்டுக்குள்ளும் தனது கண்களை நுழைப்பதால் தனிமை முற்றிலுமாகக் கெட்டுப் போய்விட்டதாகவும், இந்தக் காரை உடனே வெளியேற்றுமாறும் கிராமத்தினர் போலீசாரிடம் கேட்டுக் கொண்டனர்.

ஏற்கெனவே கூகுளின் இந்த திட்டத்துக்கு சர்வதேச அளவில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஆனால் தாங்கள் எல்லாவற்றையும் விதிப்படியும் உரிய அனுமதி பெற்றும்தான் செய்துவருவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment