சென்னை: தமிழகத்தில் 24 தொலைக்காட்சிகள் இருக்கின்றன. ஆனால் ஒரு டிவி கூட, திரையுலகினர் நடத்திய உண்ணாவிரதம், பெண்கள் நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டத்தைக் சரியாகக் காட்டவில்லையே என்று இயக்குநர் தங்கர் பச்சான் குமுறியுள்ளார்.
சென்னை மதிமுக அலுவலக வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்து வரும் பெண்களை தங்கர் பச்சான் சந்தித்து ஆறுதலும், வாழ்த்தும் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், காவிரி, முல்லைப் பெரியாறு நதி சிக்கல்கள், கச்சத்தீவு மீட்பு போன்றவை தமிழ் உணர்வை தூண்டக்கூடியவை.
இதேபோல ஈழத் தமிழர் பிரச்சினையும் தமிழர்களின் உணர்வுகளைத் தூண்டக்கூடியதாக உள்ளது.
நான்கைந்து மாதங்களாக பல்வேறு அமைப்புகள் ஈழத் தமிழர்களுக்காகப் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்தப் போராட்டங்களில் அதிக நாள் தொடர்ந்து நடைபெற்ற போராட்டமாக பெண்களின் உண்ணாவிரதப் போராட்டம் அமைந்துள்ளது.
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான உணர்வு அலைகள் கிராமப்புறங்களிலும் உருவாக வேண்டும். மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இந்தியா நமது ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி, சிங்கள படையோடு சேர்ந்து தமிழர்களைக் கொன்று குவித்துள்ளது. இது போதாதென்று, மறுவாழ்வுப் பணிகளுக்கு பணம் கேட்டு இலங்கை அதிபர் ராஜபக்சேவின் தம்பி பசில் ராஜபக்சேவும் டெல்லி வருகிறார். நம்முடைய பணத்தை வாங்கிக் கொண்டு நமது இனத்தையே அங்கு அழித்து வருகின்றனர்.
இலங்கையில் போரை நிறுத்த வேண்டும் என்ற தமிழ் மக்களின் குரல் உலக நாடுகளின் காதுகளில் சரியாக விழவில்லை. போரை நிறுத்த சோனியா காந்தி நினைத்தால் முடியும். ஆனால் அவர் அதற்கான முயற்சிகளை செய்யவில்லை.
காங்கிரஸைப் பொறுத்தவரை இப்போது என்ன நிலைப்பாட்டை எடுத்திருக்கிறதோ, அதைத்தான் தேர்தலுக்குப் பிறகும் அக்கட்சி எடுக்கும்.
தேர்தல் களத்தில் சிலர் தமிழ் உணர்வைத் தொலைத்துவிட்டனர். இலங்கைத் தமிழர்களுக்காக, உண்ணாவிரதம் இருந்தவர்கள் கூட இப்போது காங்கிரஸுடன் சேர்ந்துவிட்டனர்.
கலைஞர் நினைத்தால், ஒரே நொடியில் போரை நிறுத்தச் செய்து தமிழினத்தைக் காப்பாற்ற முடியும். நாம் எல்லாம் தமிழர்களை ஒன்றிணைக்க தவறிவிட்டோம். அரசியல் வாழ்வில் உண்மை உணர்வு விலை போய்விட்டது.
இலங்கைத் தமிழர்களுக்காக, பெண்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக தொலைக்காட்சிகள் 24 இருந்தும் இந்த செய்தி அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்படவில்லை.
இலங்கைச் சிக்கல் குறித்து நல்ல திரைப்படங்களை எடுத்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த தவறிவிட்டோம் என்றார் தங்கர்பச்சான்.
No comments:
Post a Comment