சிம்புவின் இம்சையால்தான் நன்றாக வந்திருக்க வேண்டிய காளை திரைப்படம் தோல்வியடைந்தது என்று அந்தப் படத்தின் இயக்குநர் தருண் கோபி கூறியுள்ளார்.
குறிப்பிட்ட நாயகர்களுடன் இணைந்து படம் பண்ணுவதே தனது பிறவிப் பயன் என சில இயக்குநர்கள் பேசுவதும், படம் தோல்வியடைந்ததும் அந்த நடிகர் படுமோசம் என்று திட்டி பேட்டி கொடுப்பதும் திரையுலகில் சகஜம்தான்.
இப்போது அந்தப் பட்டியலில் லேட்டஸ்ட் வரவு தருண் கோபி. திமிரு, காளை படங்களின் இயக்குநர்.
இவர் மாயாண்டி குடும்பத்தார் படத்தில் நாயகனாக நடிக்கிறார். இப்போது, தான் இயக்கிய இரு ஹீரோக்களைப் பற்றியுமே தாறுமாறாக பேட்டி கொடுத்து வருகிறார்.
திமிரு படத்தில் நடித்த விஷாலுக்கு நடிக்கத் தெரியாது என்றும், ஒரு சண்டைக் காட்சியில் நடிக்கக் கூட ரொம்ப சிணுங்குவார் என்றும் கூறியுள்ளார்.
இவர் இயக்கிய இன்னொரு ஹீரோ சிம்புவை, இம்சை அரசன் என்று வர்ணித்துள்ளார்.
'காளை படத்தில் நடித்த ஹீரோ நிஜமான இம்சை அரசன். தன் வேடத்தோடு நில்லாமல், எல்லாவற்றிலும் தலையை நுழைத்தால் படம் எப்படி ஒழுங்காக வரும்?' என்று கூறியுள்ளார்.
ஆனால் இதே தருண்கோபிதான், சிம்புவை ஓஹோவெனப் புகழந்தார். 'சிம்புவை இனி லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கக் கூடாது என்றும், அவர்தான் இனி சூப்பர் ஸ்டார்' என்றும் பெரிய ஐஸ் பாறையையே வைத்தார் படத்தின் ரிலீஸ் சமயத்தில்.
அதேபோல கமலா திரையரங்கில் படம் குப்பையாக உள்ளது என்று கூறி, ரசிகர்கள் முன்னிலையிலேயே தருணை 'நிமிர்த்தி' எடுத்தார் டி ராஜேந்தர். ஆனால் நிருபர்களிடம், 'டி ஆர் என் அண்ணன் மாதிரி, அவருக்கு படம் பார்த்துவிட்டு சந்தோஷத்தில் அருள் வந்துவிட்டது. அதைத்தான் அப்படிக் காட்டினார்' என்று வுட்டாலக்கடியாகப் பேசியது நினைவிருக்கலாம்.
No comments:
Post a Comment