இந்தி பட உலகின் முன்னணி டைரக்டர்களில் ஒருவரான ராம்கோபால் வர்மா டைரக்டு செய்த இந்தி படம், `டார்லிங்.' இது, ஒரு பயங்கர திகில் படம். ஆவிகளின் கதை.
இந்த படத்தை, `அவன் அவள் அது' என்ற பெயரில், தமிழில் தயாரித்தார்கள். ராம்கோபால் வர்மாவின் உதவியாளர் கோனா வெங்கட் டைரக்டு செய்தார். கவுரவ் சர்மா தயாரித்தார்.
மாதவன் கதாநாயகனாக நடித்தார். கதாநாயகிகளாக சதா, சமிதா ஷெட்டி ஆகிய இருவரும் நடித்தார்கள்.
முக்கால்வாசி படம் முடிவடைந்த நிலையில், சம்பள பிரச்சனை தொடர்பாக மாதவனுக்கும், படத்தின் தயாரிப்பாளர் கவுரவ் சர்மாவுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது.
மாதவன் மீது, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் கவுரவ் சர்மா புகார் செய்தார்.
``மாதவனுக்கு பேசப்பட்ட சம்பளத்தை குறைக்க வேண்டும். என் படத்தை திரைக்கு கொண்டுவருவதற்கும் அனுமதிக்க வேண்டும்'' என்று அந்த புகாரில் அவர் கூறியிருந்தார்.
இதேபோல் கவுரவ் சர்மா மீது, மாதவன் ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறியிருந்ததாவது:-
``அவன் அவள் அது படத்துக்காக, எனக்கு பேசப்பட்ட சம்பளம் ரூ.75 லட்சம். அதில், ரூ.15 லட்சத்தை மட்டுமே கொடுத்தார்கள். மீதி ரூ.60 லட்சத்தை இதுவரை கொடுக்கவில்லை.
நான், இந்த படத்துக்கு 55 நாட்கள் கால்ஷீட் கொடுத்து இருந்தேன். 40 நாட்கள்தான் படப்பிடிப்பு நடந்தது. 15 நாட்கள் படப்பிடிப்பு பாக்கி இருக்கும் நிலையில், படத்தை முடித்து வெளியிட தயாரிப்பாளர் கவுரவ் சர்மா முயற்சி செய்கிறார்.
படத்துக்காக, நான் `டப்பிங்'கும் பேசவில்லை. இந்த நிலையில், படத்தை திரைக்கு கொண்டுவரக் கூடாது. என் சம்பள பாக்கி ரூ.60 லட்சத்தையும் வாங்கி தரவேண்டும்.''
இந்த பிரச்சனை பற்றி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் விசாரணை நடத்தி வருகிறது. மாதவன், கவுரவ் சர்மா ஆகிய இருவரும் விசாரணையில் பங்கேற்றார்கள்.
2 பேருக்கும் இடையே இதுவரை எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.
No comments:
Post a Comment