நீலகிரி: நீலகிரி மாவட்ட மலைப் பகுதிகளில் வசிக்கும் தோடர் இனத்தவரின் திருமணம், மணப்பெண் கர்ப்பம் தரித்த பின்னரே அங்கீகரிக்கப்படுகிறது. பாரம்பரியமாக இந்த பழக்கத்தை அவர்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப் பகுதிகளில் தோடர் இனத்தவர் அதிகம் வசித்து வருகின்றனர். அடர்ந்த காடுகளில் தங்கியிருக்கும் இவர்களின் திருமணத்தில் விநோதமான பழக்கம் அடங்கியுள்ளது.
இவர்களது சம்பிரதாயப்படி திருமணம் செய்ய முடிவெடுக்கப்பட்ட மணமகனும், மணமகளும், மணமகன் வீட்டில் 2 மாதங்கள் தங்க வைக்கப்படுகின்றனர்.
அதன் பின்னர் மணமகள் தனது தாய் வீட்டுக்கு அழைத்து செல்லப்படுவார். பின்னர் அந்தப் பெண் கர்ப்பமாகும்போது, அவருக்கு 7 மாதமாக இருக்கும்போது திருமணச் சடங்குகள் நடைபெறும்.
இந்தத் திருமணத்தை வில், அம்பு கொண்டாட்டம் என்ற பெயரில் விழாவாகக் கொண்டாடுகின்றனர். அப்போது, அந்தப் பெண்ணின் கணவராக வரும் நபர், காட்டுக்குள் சென்று மரத்திலிருந்து கிளையைப் பிய்த்து அதில் வில்லும், அம்பும் செய்து அதை மணமகளின் கழுத்தில் மாலை போல போடுகிறார்.
அப்படிப் போடும் போது, அந்தப் பெண் அதை வாங்கிக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால், நான் வயிற்றில் சுமப்பது உனது சிசுவைத்தான் என்று கூறுவதாக அர்த்தமாகுமாம்.
இதைத் தொடர்ந்து திருமண வைபவம் களை கட்டுகிறது. ஆண்களும், பெண்களும் தனித் தனியாக தங்களது பாரம்பரிய உடை அணிந்து ஆடிப் பாடுகின்றனர்.
பின்னர் தோடர் சமுதாயத்தின் மூத்தவர்களிடம் மணமக்கள் காலைத் தொட்டு ஆசிர்வதிக்கின்றனர். அப்போது மூத்தவர்கள் மணமக்களின் தலையை தங்களது கால் விரல்களால் தொட்டு ஆசிர்வாதம் செய்கின்றனர்.
இந்த வில், அம்பு விழா பெளர்ணமிக்கு முந்தைய நாளில் தான் கொண்டாடப்படுகிறது. இதை பார்க்க வெளிநாட்டு பயணிகளும் வந்து குவிகின்றனர்.
இது குறித்து தோடர் இன பெண்ணான வாசமல்லி என்பவர் கூறுகையில், எனது மகனுக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னதாக திருமணம் முடிந்தது. தற்போது எனது மருமகள் ஐந்து மாதம் கர்ப்பமாக இருக்கிறாள். எங்கள் இனத்துக்கு புதிய உறுப்பினர் வருவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. விரைவில் இதை பெரிய விழாவாக கொண்டாடுவோம் என்றார் அவர்.
No comments:
Post a Comment