19 ஸ்டெப்ஸ் படத்தில் கமல்ஹாசனுடன் பசுபதி மற்றும் பிருத்வி ராஜ் இணைந்து நடிக்கின்றனர்.
பரத் பாலாவும், வால்ட் டிஸ்னியும் இணைந்து உருவாக்கும் புதிய படம் 19 ஸ்டெப்ஸ். பரத் பாலா இயக்குகிறார். இப்படத்தில் கமல்ஹாசன், ஆசின் மற்றும் ஜப்பானிய ஹீரோ டடோனபு அசனோ ஆகியோர் நடிக்கவுள்ளனர்.
இதில் கராத்தே மாஸ்டராக கமல்ஹாசன் வருகிறார். எம்.டி.வாசுதேவன் நாயரின் கதையில் உருவாகும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஒரே நேரத்தில் தமிழ், ஆங்கிலம் மற்றும் ஜப்பானிய மொழிகளில் இப்படம் உருவாகிறது.
படத்தின் பெரும் பகுதி கேரளாவில் படமாக்கப்படுகிறது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் கேரளாவில் படப்பிடிப்பு தொடங்குகிறது. பின்னர் சீனாவுக்கு செல்கிறார்கள்.
இப்படத்தில் தற்போது பசுபதியும், பிருத்விராஜும் இணைந்துள்ளனர். பசுபதி கமலுடன் இணைவது இது 3வது முறையாகும். கமல்ஹாசனின் விருமாண்டி பசுபதிக்கு பெரிய பிரேக்காக அமைந்தது. இதையடுத்து மும்பை எக்ஸ்பிரஸ் படத்திலும் நடித்தார். தற்போது 3வது முறையாக கமலுடன் இணைகிறார்.
திறமையாளர்களை தட்டிக் கொடுத்து தூக்கி விடும் திறமைசாலியான கமல்ஹாசன், நாசருக்கு அடுத்து பசுபதியை தனது படங்களில் அடிக்கடி பயன்படுத்த ஆரம்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல கமல்ஹாசனுடன் முதல் முறையாக இணைகிறார் பிருத்விராஜ்.
ஏகப்பட்ட திறமைசாலிகள் இணைந்து கலக்கப் போவதால் 19 ஸ்டெப்ஸ் படம் குறித்த எதிர்பார்ப்பு ஏகமாகியுள்ளது.
No comments:
Post a Comment