இலங்கையில் உடனடி போர்நிறுத்தம் கோரி சென்னை தாயகத்தில் 10வது நாளாக உண்ணாவிரதம் இருந்துவரும் பெண்களை நடிகர் விவேக் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார். அவர்களின் நிலையைப் பார்த்து, 'உயிர் கொடுத்த தாயையும் சகோதரிகளையும் இப்படி பட்டினியாய் பார்ப்பதைவிட வேறு கொடுமை ஏதுமில்லை.
ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் இது அவமானம்' என்று கண் கலங்கினார். அவர் மேலும் கூறியதாவது:தமிழர்கள் ஈழ மண்ணில் படும் கஷ்டத்துக்காக நீங்கள் நடத்தும் போராட்டம் ஈடு இணை இல்லாதது. இந்தியாவில் மட்டுமல்ல... உலிகிலேயே இப்படிப்பட்ட உயர்வான பெண்களைப் பார்க்க முடியாது. பொதுவாக பெண்மை வணங்கத்தக்கது. குழந்தைகள் பட்டினி கிடந்தால் கூட பெண்கள் தாங்கிக் கொள்ளமாட்டார்கள். தங்கள் குழந்தைகளையும் நினைக்காமல் இலங்கை தமிழர்களுக்காக பட்டினி போராட்டம் நடத்துவது என்னை ஒரு நிலையில் இருக்க விடவில்லை. இந்த தாய்களுக்கு தமிழ்ச் சமூகமே நன்றிக்கடன் பட்டுள்ளது.
நீங்கள் செய்திருப்பது மிகப்பெரிய தியாகம். ஒவ்வொரு தமிழர்களின் உணர்வையும் செயலாக்கி இருக்கிறீர்கள். எதையும் எதிர்பார்க்காமல் தியாக உணர்வோடு போராட்டம் நடத்துகிறீர்கள். எந்த கட்சி சார்பும் இல்லாமல் தமிழர் என்ற முறையில் நான் முழுமையாக ஆதரிக்கிறேன், என்றார். பின்னர் உண்ணாவிரதம் இருந்த பெண்களுக்கு ஒரு அட்டைப்பெட்டி நிறைய தண்ணீர் பாட்டில்கள் வாங்கி கொடுத்தார்.
விஜயகாந்த் வேண்டுகோள்:இந் நிலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுமாறு அந்தப் பெண்களிடம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொலைபேசியில் வேண்டுகோள் விடுத்தார்.தேர்தல் பிரச்சாரத்தில் இருக்கும் விஜயகாந்த் செல்போனில் பெண்களிடம் பேசுகையில், போராட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.ஆனால் அந்தப் பெண்கள், இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக சோனியா காந்தி உத்தரவாதம் அளித்தால் மட்டுமே உண்ணாவிரதத்தை நிறுத்திக் கொள்வோம் என்று கூறிவிட்டனர்.
அதே போல தமிழ்நாடு வக்கீல்கள் சங்கம், சென்னை உயர் நீதிமன்ற வக்கீல்கள் சங்கம் ஆகியவை இந்த உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.கருணாலயா உள்ளிட்ட மகளிர் சமூக சேவை அமைப்புகளை சேர்ந்தவர்கள், கல்லூரி மாணவர்கள் உள்பட ஏராளமானோர் உண்ணாவிரத போராட்டம் நடக்கும் இடத்துக்கு வந்து ஆதரவு தெரிவித்தனர்.போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்த மாணவர்கள் மற்றும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மகளிர் அமைப்பினர் திடீரென கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி பாந்தியன் சாலையில் ஊர்வலமாக சென்றனர். பாந்தியன் சாலை சந்திப்பில் அவர்கள் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர். பின்னர், எழும்பூர் ரயில் நிலையம் வழியாக ஊர்வலகமாக சென்றுவிட்டு மீண்டும் உண்ணாவிரதம் இருந்த இடத்திற்கே வந்து போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
No comments:
Post a Comment