மும்பையில் கடந்த வாரம் நடைபெற்ற `லேக்மி' ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில், இந்தி நடிகர் அக்ஷய் கன்னாவும் அவருடைய மனைவி டுவிங்கிள் கன்னாவும் பங்கேற்றனர்.
மேடையில் ஒயிலாக நடந்து வந்த அக்ஷய் கன்னா, முன்வரிசையில் அமர்ந்து இருந்த அவருடைய மனைவி டுவிங்கிள் அருகே வந்ததும், திடீரென நின்றார்.
பின்னர் மனைவியை பார்த்து தனது `பேன்ட் பட்டனை' கழற்றும்படி கேட்டுக்கொண்டார். உடனே டுவிங்கிளும் பலத்த மகிழ்ச்சி ஆரவாரத்துக்கு இடையே கணவரின் பேன்ட் பட்டனை கழற்றத் தொடங்கினார்.
மும்பையை சேர்ந்த பிரபல சமூக சேவகி அனில் நாயர், அணிவகுப்பு நிகழ்ச்சியில் ஆபாச காட்சிகள் இடம் பெற்றதாக, அக்ஷய் தம்பதிகள் மற்றும் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மீது போலீசில் புகார் செய்தார்.
அதைத்தொடர்ந்து வகோலா போலீஸ் நிலையத்தில், அக்ஷய் மற்றும் டுவிங்கிள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நடிகை டுவிங்கிள் கன்னா வக்கீலுடன் நேற்று வகோலா போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார். அவரை கைது செய்த போலீசார் பின்னர் அவரை ஜாமீனில் விடுதலை செய்தனர்.
அக்ஷய் கன்னா தற்போது வெளிநாட்டில் இருப்பதால், அடுத்த வாரம் இந்தியா திரும்பியதும் அவர் சரண் அடைவார் என்று போலீசாரிடம் தெரிவித்தார்.
அக்ஷய் கன்னா கைது செய்யப்பட்டதும் இருவர் மீதும் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்தார்.
பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொண்டதாக, `இ.பி.கோ.' 294-வது பிரிவின் கீழ் அவர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், 3 மாதம் வரை ஜெயில் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகைகள் மற்றும் `மாடல்' அழகிகள் மீது இதுபோன்ற ஆபாச வழக்குகள் பதிவு செய்யப்படுவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே, பிரபலமான `மாடல்'களான மதுசாப்ரே-மிலிந்த் சோமன் இருவரும் உடலில் மலைப்பாம்பை சுற்றிக்கொண்டு அரை நிர்வாணமாக போஸ் கொடுத்ததற்காக வழக்கு தொடரப்பட்டு இன்னும் விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த 2006-ம் ஆண்டில் நடைபெற்ற `பீர்' விளம்பர நிகழ்ச்சியில் நடிகை ராக்கி சாவந்த் மீதும், 2006-ல் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற புத்தாண்டு விழாபோது நடிகை மல்லிகா ஷெராவத் மீதும் இதேபோல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
No comments:
Post a Comment