Please Visite here - www.cenimagallary.blogspot.com

Friday, February 27, 2009

'அப்படின்னா நான் கிளம்புறேன்...' -ரஹ்மானின் பாசாங்கும், பிரஸ்மீட்டும்!



ஆஸ்கர் விருதுடன் சென்னை வந்திறங்கிய ஏ.ஆர்.ரஹ்மான் அன்று மாலையே பத்திரிகையாளர்களை சந்தித்தார். சலசலப்பும், கலகலப்புமாக நடந்தேறியது இந்த சந்திப்பு. ஹாலுக்குள் நுழைந்த ரஹ்மானை வழக்கத்திற்கு மாறாக கைதட்டி வரவேற்றார்கள் அத்தனை பத்திரிகையாளர்களும். இந்த சந்தர்ப்பத்திற்காகவே பல யுகங்களாக காத்திருந்தது போல அவரை சூழ்ந்து கொண்டார்கள் புகைப்படக்காரர்கள்.

'நான் எங்கேயும் ஓடிவிட மாட்டேன். இங்கேதான் இருப்பேன். நிதானமாக எடுத்துக்கோங்க' என்று அவரே கேட்டுக் கொண்டும், யாரும் விலகுவதாக இல்லை. சுமார் அரை மணி நேரம் ஒரே தள்ளு முள்ளு. ஆனாலும் தனது புன்னகையை கொஞ்சமும் விலக்கிக் கொள்ளாத ரஹ்மான் 'மும்பையிலே பேட்ச் பேட்ச்சா எடுப்பாங்க. அதே மாதிரி நீங்களும் எடுங்களேன்' என்றெல்லாம் யோசனை சொன்னார். ம்ஹ¨ம், ஒருவரும் கேட்பதாக இல்லை. 'அப்படின்னா நான் போறேன்' என்று கோபித்துக் கொண்டு போவதுபோல பாசாங்கு காட்டினார் ரஹ்மான். அப்போதும் யாரும் அசருவதாக இல்லை. இப்படியே கழிந்தது அரை மணி நேரம். இறுதியாக பேச ஆரம்பித்தார் இசைப்புயல்.

வேடிக்கை என்னவென்றால், இந்த பத்திரிகையாளர் சந்திப்பு இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது. ஒரு ஹாலில் பிரிண்ட்டிங் மீடியாக்களும், இன்னொரு ஹாலில் டி.வி இன்டர்நெட், எஃப்எம் போன்ற எலக்ட்ரானிக் மீடியாக்களும்! முதல் சந்திப்பு தள்ளுமுள்ளு என்றால், இந்த எலக்ட்ரானிக் பிரிவு, அநியாயத்துக்கு டீசண்ட்! எந்தளவுக்கு என்றால், 'ரொம்ப டீசன்ட்டா இருக்காங்களே' என்று ரஹ்மானே வியக்கிற அளவுக்கு!

இனி கேள்வி பதில்...

ஆஸ்கர் விருதை வென்றதற்காக உங்களை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு எம்.பி. பதவி வழங்கினால் ஏற்றுக் கொள்வீர்களா?

அந்த மாதிரி பதவிகளை எல்லாம் நான் எதிர்பார்க்கவில்லை.

தமிழ், இந்தி. ஆங்கில மொழிகளில் இசையமைக்கும்போது எந்த மொழி படம் உங்களுக்கு சுதந்திரமாக இருந்தது?

என் தாய் மொழி தமிழ் என்பதால், தமிழ் படங்களில் இசையமைக்கும்போதுதான் அதிக சுதந்திரம் இருப்பதாக உணர்ந்தேன்.

ஸ்லம்டாக் மில்லியனர் ஆஸ்கர் விருது பெறும் என்று எதிர்பார்த்தீர்களா?

அந்த படத்தை முதலில் வாங்குவதற்கு யாரும் முன்வரவில்லை. நல்ல கதையம்சம் இருப்பதாக நான் ஆரம்பத்திலேயே உணர்ந்தேன். அதனால் அந்த படத்திற்கு முழுமையாக ஈடுபாட்டுடன் இசையமைத்தேன். இத்தனைக்கும் இசைக்காக அவர்கள் ஒதுக்கியிருந்த பட்ஜெட் மிகவும் குறைவு. அதற்காக நான் இந்த படத்தை வேண்டாம் என்று கூறியிருந்தால், இந்த ஆஸ்கரை இழந்திருப்பேன்.

இசைப்புயல், ஆஸ்கர் நாயகன் இந்த இரண்டு பட்டங்களில் உங்களுக்கு பிடித்தது எது?

இரண்டுமே பிடிக்கலே...

வைரமுத்து எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எப்போ இசையமைக்க போறீங்க?

அவரு எழுதி கொடுத்ததும்! (சிரிப்பு)

உங்கள் இசையில் சிம்பொனி எப்போது வரும்?

அதுக்கு இன்னும் டைம் ஆகும்.

ஆஸ்கருக்கு அடுத்து உங்கள் முயற்சி?

திருக்குறளுக்கும், குணங்குடி மஸ்தான் சாகிப் பாடல்களுக்கும் இசையமைக்க போகிறேன்.

தொடர்ந்து தமிழ் படங்களுக்கு இசையமைப்பீர்களா?

நல்ல படங்களாக இருந்தால் இசையமைப்பேன்.

உங்களை நடிக்க அழைத்தால் ஹீரேவாக நடிப்பீர்களா?

எனக்கு நடிக்க நேரம் இல்லை.

இளையராஜா உங்களுக்கு வாழ்த்து தெரிவித்தாரா?

யுவன்சங்கர் ராஜா எனக்கு ஈ-மெயிலில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில் அப்பாவும் குடும்பமும் வாழ்த்துவதாக குறிப்பிட்டிருந்தார்.

உங்களை ஓபாமா பார்க்க விரும்பினாராமே?

தெரியாது.

இலங்கை விஷயத்திலே நீங்கள் பேசினால் கவனிக்கப்படும். அங்கே அமைதி திரும்ப வேண்டும்னு பேசுவீங்களா?

போர் நடக்கணும்னு யாருதான் விரும்புவாங்க. அங்கே அமைதி திரும்பணும். இலங்கை தமிழர்களுக்காக நான் 'வெள்ளை பூக்கள்' என்ற பாடலுக்கு ஏற்கனவே இசையமைச்சிருக்கேன். அங்கு அமைதி திரும்பனும்னு பிரார்த்தனை செய்கிறேன்.

தமிழ் திரையுலகம் உங்களுக்கு பாராட்டு விழா நடத்தனும்னு முடிவு செஞ்சுருக்கு. எப்போ தேதி கொடுப்பீங்க?

ரொம்ப சீக்கிரம்.

தமிழ் படங்களுக்கு ஆஸ்கர் கிடைக்குமா?

அங்கேயுள்ள டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் படத்தை வாங்கினா கிடைக்கும்.

ஸ்லம்டாக் படப்பிடிப்பு நடத்தப்பட்ட தாராவிக்கு ஏதாவது செய்ய விரும்புறீங்களா?

இப்பவே அது டூரிஸ்ட் ஸ்பாட்டா ஆயிடுச்சு. உலகத்தின் பார்வை இப்போ தாராவியில் இருக்கு.

எல்லா கேள்விகளுக்கும் இப்படி நறுக்கு தெறித்தார்போல சுவையாகவும், ஜாலியாகவும் பதில் சொன்ன ரஹ்மான், பலத்த பாதுகாப்புடன் வீடு திரும்பினார். நள்ளிரவு வரைக்கும் கூட அவரது வீட்டிற்கு சென்று, பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார்கள் தொலைக்காட்சி நிருபர்கள்.

No comments:

Post a Comment