இந்தியாவுக்கு எதிரான முதல் டிவென்டி 20 கிரிக்கெட் போட்டியில், நியூஸிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து எளிதில் வென்றது.
நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அந்நாட்டுக்கு எதிராக இரண்டு டிவென்டி 20, ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
கிறிஸ்ட்சர்சில் உள்ள ஏ.எம்.ஐ. மைதானத்தில் இன்று நடந்து முடிந்த போட்டியில், 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி, 18.5 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அந்த அணியின் மெக்கலம் ஆட்டமிழக்காமல் 56 ரன்களையும், குப்டில் 41 ரன்களையும் எடுத்தனர். டெய்லர் 31 ரன்களையும், ஓரம் ஆட்டமிழக்காமல் 29 ரன்களையும் சேர்த்தனர். துவக்க ஆட்டக்கரர் ரைடர் மட்டும் ஒரு ரன்னையே எடுத்தார்.
இந்தியா தரப்பில் ஜாகீர் கான், இஷாந்த் ஷர்மா மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
முன்னதாக முதலில் பேட் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது.
அணியில் அதிகபட்சமாக சுரேஷ் ராய்னா 61 ரன்களை எடுத்தார். சேவாக் 26 ரன்களையும், ஹர்பஜன் 21 ரன்களையும் எடுத்தனர். யூசுப் பதான் 20 ரன்களையும், இர்பான் பதான் 12 ரன்களையும் எடுத்தனர். ஏனையோர் சொற்ப ரன்களையே எடுத்தனர்.
நியூஸிலாந்து தரப்பில் ஒ பிரியென், பட்லெர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், செளதி, விட்டொரி, மெக்கலம் மற்றும் ரைடர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இப்போட்டியில் மெக்கலம் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
No comments:
Post a Comment