விடிந்தால் ஆஸ்கர் அதிகாரப்பூர்வ பட்டியல் தெரிந்துவிடும். நம்ம ‘மெட்ராஸ் மொசார்ட்’டுக்கு விருது உண்டா இல்லையா என்ற சஸ்பென்ஸ் நீங்கிவிடும்.
ஆனால் அதற்குள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பணம் சுருட்ட ஒரு கும்பல் தீவிரமாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறது. ஏராளமான புதுப்புது இணைய தளங்களை உருவாக்கி வைத்துள்ள இவர்கள், ஸ்லம்டாக் மில்லியனேர் எத்தனை ஆஸ்கர் விருதுகள் வாங்கும்… என்னென்ன பிரிவுகளில் வாங்கும்? ரஹ்மானுக்கு விருது உண்டா இல்லையா? என சூதாட்டம் நடத்தி பணம் பறித்துக் கொண்டுள்ளன.
இன்னொரு பக்கம், ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தே தீர வேண்டும்… அவர் தகுதிக்கு முன் ஆஸ்கர் ஒரு பொருட்டே அல்ல, என்ற குரல்கள் ஒலிக்கத் துவங்கியுள்ளன, தமிழகத்தின் பக்கத்து மாநிலமான புதுவைப் பகுதியிலிருந்து.
காரைக்காலைச் சேர்ந்த சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ரஹ்மானுக்கு ஆஸ்கர் கிடைத்தே தீர வேண்டும் என்ற கூட்டுப் பிரார்த்தனாயில் ஈடுபட்டுள்ளனர். தேவாலயங்கள், அம்மன் கோயில்கள், மசூதிகளில் பிரார்த்தனைகள் தொடர்ந்து நடந்தவண்ணம் உள்ளன.
அது என்ன ரஹ்மான் மீது மட்டும் இந்த தமிழர்களுக்கு இத்தனை பாசம்?
2004-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதியை உலகம் உள்ளளவும் மறந்துவிட முடியாது. அன்றுதான் இயற்கை சுனாமி வடிவில், தான் படைத்த மனித சமுதாயத்தையே பெருமளவு விழுங்கி கோபம் தணித்துக் கொண்டது.
அரசு ஆயிரம் உதவிகள் தந்தாலும், இந்த மனிதப் பேரவலத்திலிருந்து மக்கள் மனம் அத்தனை சுலபத்தில் இயல்புக்குத் திரும்பவே இல்லை.
அந்த சூழலில்தான் இசைப் புயல் ஏஆர் ரஹ்மான் தனது குழுவினருடன் காரைக்காலுக்கு அருகில் உள்ள கோட்டுச்சேரிமேட்டில் வந்திறங்கினார். அவருடன், அவரால் பிரபலமடைந்த இசைக் கலைஞர்கள் ஹரிஹரன், கார்த்திக், சின்மயி மற்றும் டிரம்மர் சிவமணி ஆகியோரும் வந்திருந்தார்கள்.
திறந்த வெளி மணல்பரப்பையே மேடையாக்கி ரஹ்மானும் அவரது குழுவினரும், சுனாமியால் நைந்து போயிருந்த அந்த கடல்புரத்து மக்கள் மனங்களை தங்கள் இசையிழைகளால் நெய்தார்கள்… ஆம்… நெய்தலில் ஒரு இசை நெய்தல் நடத்தினார் ரஹ்மான்.
இரண்டரை மணி நேரம்… அந்த மக்கள் இழந்த எதையோ ஒன்றைத் திரும்பப் பெற்றதாய் சந்தோஷம் கொண்டார்கள்.
இந்த உலகில் வேறு யாரும் செய்ய முடியாத அரிய சாதனை அது. கடவுளால் மட்டுமே கொடுக்க முடிந்த ஆத்ம சந்தோஷத்தை ரஹ்மான் என்ற கலைஞர் தந்தார், சுனாமி பாதித்த அந்த மக்களுக்கு.
அந்த தருணத்தையும், ரஹ்மான் தங்களுக்குத் தந்த அந்த அன்பு இசைப் பரிசையும் மக்கள் அத்தனை சுலபத்தில் மறந்துவிடவில்லை.
இதோ… அடுத்த 24 மணி நேரத்தில் ஆஸ்கர் மேடையில் ரஹ்மானும் நிற்கக் கூடிய வாய்ப்பு. அந்த வாய்ப்பை நூறு சதவிகிதம் உறுதிப்படுத்த, எல்லாம் வல்ல இறைவனை நோக்கி பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர, காரைக்கால் பகுதியைச் சேர்ந்த கடல்புரத்து மக்கள் அனைவரும்.
‘எங்களின் பிரார்த்தனையை கடவுள் நிச்சயம் கேட்பார்… நல்ல பிரார்த்தனைகளுக்கு தோல்வி கிடையாது’, என்கிறார்கள் கோட்டுச்சேரிமேடு மக்கள் கேரஸாய்.
இது கோட்டுச்சேரிமேடு மக்களின் பிரார்த்தனை மட்டுமல்ல… ஒட்டுமொத்த தேசத்தின் பிரார்த்தனையும் கூட!
No comments:
Post a Comment