Please Visite here - www.cenimagallary.blogspot.com

Sunday, July 12, 2009

பொன்னர்-சங்கர்: கருணாநிதி தொடங்கி வைத்தார்

பிரசாந்த் நடிக்கும் பொன்னர் சங்கர் வரலாற்றுத் திரைப்படத்தை தமிழக முதல்வர் கருணாநிதி இன்று துவக்கி வைத்தார்.

முதல்வர் கருணாநிதி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவல் 'பொன்னர்-சங்கர்'.

கொங்கு மண்டலத்தை ஆட்சி செய்த பொன்னர்- சங்கர் சகோதரர்களின் வீர வரலாற்றைச் சித்தரிக்கும் இந்த வீர காவியம் தமிழ் இலக்கிய வரலாற்றில் மிகுந்த முக்கியம் வாய்ந்த பதிவாகப் பார்க்கப்படுகிறது.

கலைஞரை விமர்சிப்போரும் கூட போற்றிப் பாராட்டும் அளவு சிறப்பு பெற்றது பொன்னர் - சங்கர் நாவல்.

கொங்கு மண்டலத்தின் கலை, கலாச்சாரம், பண்பாட்டை மிக நுணுக்கமான முறையில் சித்தரித்திருப்பார் இந்த நூலில் கலைஞர்.

இந்த நாவலைப் படமாக்க பல இயக்குநர்கள் ஆர்வம் காட்டிய போதும், அந்த வாய்ப்பு நடிகர் தியாகராஜனுக்குக் கிடைத்துள்ளது. அவர் மகன் நடிகர் பிரசாந்த் பொன்னர்-சங்கர் ஆகிய இரு வேடங்களில் இந்தப் படத்தில் நடிக்கிறார்.

தியாகராஜன் தயாரித்து இயக்குகிறார்.

இந்த படத்தின் தொடக்க விழா வள்ளுவர் கோட்டத்தில் இன்று நடந்தது.

படப்பிடிப்பை முறைப்படி துவக்கி வைத்த கருணாநிதி, விழாவில் பேசியதாவது:

பொன்னர்-சங்கர் படத்தொடக்க விழா வள்ளுவர் கோட்டத்தில் நடப்பது மனதுக்கு இதம் தரும் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு தொடராக எழுதப்பட்ட வரலாற்று ஓவியம் நிழற்படமாக, பேசும் படமாக, பலரும் இதுபற்றி பேசும் படமாக வெளிவர இருக்கிறது என்பதை நண்பர்கள் எடுத்துரைத்தார்கள்.

இந்த படத்தில் பல கதாபாத்திரங்கள் உலா வர உள்ளன. ஒவ்வொரு பாத்திரத்தையும் ஏற்று நடிப்பவர்கள் தகுதியானவர்கள்-பண்பட்ட நடிகர்கள். அவர்களை எல்லாம் இணைத்து இயக்குனர் தியாகராஜன் இயக்குகிறார்.

ஏற்கனவே 2 வேடங்களில் ஜீன்ஸ் படத்தில் நடித்து பெரும்புகழ் பெற்றவர் பிரசாந்த். இந்த படத்தில் பொன்னராகவும், சங்கராகவும் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

முன்பு நடித்ததை விட இந்த படத்தில் பெரும் புகழை ஈட்டி தருவானாரால் அதைவிட எனக்கு வேறு பெருமை இல்லை. பிரசாந்த் நல்ல நடிகர். படித்த இளைஞர். மக்களிடம் செல்வாக்கு பெற்றவர். இடைப்பட்ட காலத்தில் கலைத்துறையில் இருந்து ஒதுங்கி காணப்பட்டாலும் இந்த படத்துக்கு பிறகு கலை உலகம் அவரை முழுமையாக பயன்படுத்தியே தீரும். அத்தகைய கட்டாயத்தை இந்தப் படம் ஏற்படுத்தும்.

வள்ளுவர் கோட்டத்தின் பின்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை சுற்றி பார்த்தாலே புரிந்துவிடும், தியாகராஜன் தயாரித்து தரும் இந்த படம் எத்தனை பிரமாண்டமாக அமையும்....பெரும் வெற்றியை பெறும் என்று!

தியாகராஜன் நல்ல இயக்குனர். திறமையான கலைஞர். அவரது உழைப்போடு, ஒத்துழைப்போடு இந்த படத்தின் வெற்றி விழாவிலும் கலந்து கொண்டு வாழ்த்தும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன், என்றார் கருணாநிதி.

தலையூர் காளியாக நெப்போலியன்...

இந்த படத்தில் மத்திய அமைச்சர் நெப்போலியன் தலையூர் காளி என்ற முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவர் ராஜாவாக நடித்த முதல் காட்சி இன்று கருணாநிதி முன்னிலையில் படமாக்கப்பட்டது.

ஏவி.எம்.சரவணன் கிளாப் செய்ய கருணாநிதி கேமராவை இயக்கி வைத்தார். மேடையில் ராஜ கம்பீரத்தோடு நெப்போலியன் கேமிரா முன்பு தோன்றியதை அங்கு திரண்டு இருந்தவர்கள் கைதட்டி ஆராவரம் செய்தனர்.

ராஜ்கிரண்

பொன்னர்-சங்கர் படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடிப்பவர் ராஜ்கிரண். கலைஞரே இவரைத்தான் அந்த குறிப்பிட்ட வேடத்துக்கு பரிந்துரைத்தாராம்.

சத்யராஜ், பிரகாஷ்ராஜ், பொன் வண்ணன், ரியாஸ்கான், மனோரமா, குஷ்பு, அம்பிகா, சீதா உள்பட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிக்கின்றனர்.

விழாவில் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் ராமநாராயணன், பாக்யராஜ், அபிராமி ராமநாதன், ஏவி.எம்.சரவணன், ராஜ்கிரண் ஆகியோர் பங்கேற்று வாழ்த்திப் பேசினார்கள்

No comments:

Post a Comment