கவுதமிக்கு முதல் படத்திலேயே (குரு சிஷ்யன்) அந்த அந்தஸ்து வந்துவிட்டது. நயன்தாராவுக்கோ இரண்டாவது படத்தில் (சந்திரமுகி) அந்தக் கிரீடம் கிடைத்துவிட்டது. சிவாஜி என்ற ஒரே படம் ஸ்ரேயாவை சிகரத்தில் ஏற்றிவிட்டது. இந்த வரிசையில் அம்பிகா, ராதா, மீனா, சவுந்தர்யா, ரூபினி... இப்படி பல உதாரணங்களைச் சொல்லலாம்.

இதையும் தாண்டி அசின், த்ரிஷா போன்ற நாயகிகள் முன்னணியில் இருக்கவே செய்கிறார்கள்.
நமீதாவுக்கு எப்படியும் முதல் நிலை நடிகையாக வரவேண்டும் என்ற கனவு நீண்ட நாட்களாகவே உள்ளது. ரஜினி அல்லது கமலுடன் நடித்தால் எப்படியும் முதல் நிலைக்கு வந்துவிடலாம் என்ற நம்பிக்கை அவருக்கு.
சில ஆண்டுகளுக்கு முன் கமலுடன் ஒரு படம் நடிக்க வாய்ப்பு வந்து பின் நழுவிப் போனது.
இப்போது எப்படியாவது ரஜினி படத்தில் தலைகாட்டிவிட வேண்டும் எனத் துடிக்கிறாராம் நமீதா. சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், தனக்கு மிகவும் பிடித்தமான நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிதான் என்றும், அவருடன் ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் போதும், தனது சினிமா கனவு முழுவதும் நிறைவேறிவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
எந்திரனுக்குப் பிறகு ரஜினி படம் நடிப்பாரா என்பதைப் பொறுத்துதான் நமீதா ஆசை நிறைவேறுவதும் நிறைவேறாததும்.
எதுக்கும் ஒரு நடை ராகவேந்திரா மண்டபம் வரை போய் ரஜினியுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கங்க நமீதா... இப்போதைக்கு உடனடியாக நடக்கக் கூடியது அதுதான்!
No comments:
Post a Comment