சில ஆண்டுகளுக்கு முன்பு படித்த பத்திரிக்கை செய்தி இது. இயக்குனர் ஹரி நடிகர் விஜய்யிடம் ஒரு கதை சொல்ல, அதை நிராகரித்து அனுப்பிவிட்டார் இளைய தளபதி என்றது அந்த செய்தி. எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை. ஆனால், இப்போது நாம் கேள்விப்படும் செய்தி உண்மை என்று உறுதியாக சொல்லமுடியும். விஜய் படங்கள் ஏற்படுத்திய நஷ்டத்தை ஈடுகட்ட, ஹரியின் படத்தை வெளியிடுகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்த ஹரி, முதலில் இயக்குனர் பாலசந்தரிடம் சேர்ந்து, பிறகு இயக்குனர் சரணிடம் ‘அல்லி அர்ஜூனா’ வரை பணியாற்றினார். முதல் படம் - ‘தமிழ்’. முதல் படத்தை மதுரை பேக்ட்ராப்பில் எடுத்தவர், அடுத்தடுத்து தனது படக்குழுவினரையும், பிறகு திரையரங்கில் ரசிகர்களையும் ஊர் ஊராக தமிழகம் முழுக்க கூட்டி சென்றார். பேரரசு, படத்தலைப்புக்கு ஒரு ஊரை முடிவு செய்துவிட்டு மற்றதை கவனிப்பார் என்றால், ஹரி கதைக்களத்திற்கு ஒரு ஊரை முடிவு செய்துவிட்டு மற்றதை பிறகு கவனிப்பார். படம் முழுக்க, ஊர் சம்பந்தப்பட்ட விஷயங்களை கதாபாத்திரங்கள் மூலம் பேசவிடுவார். படத்தலைப்பிலேயே ஒரு பாஸிட்டிவ்னெஸ் இருக்கும்.
சாமியில் திருநெல்வேலியையும், கோவிலில் நாகர்கோவிலையும், அருளில் கோயமுத்துரையும், ஐயாவில் தென்காசியையும் காட்டியவர், ஆறில் சென்னைக்கு வந்தார். அதற்கு பிறகு எடுத்த தாமிரபரணி, வேல், சேவல் படங்களுக்காக திரும்ப தெற்கேயே சென்றார். தற்போது, சிங்கமும் தூத்துக்குடி, திருநெல்வேலி வட்டாரங்களிலேயே எடுத்துள்ளார். தென்மாவட்டங்களில் அவருக்குரிய பரிச்சயங்களாலேயே, தொடர்ந்து அங்கு படமெடுப்பதாக காரணம் கூறியிருக்கிறார் ஹரி. (கவனிக்க: கதைக்களம் தான் வெவ்வேறு ஊர்கள். பெரும்பாலும் ஷூட்டிங் ஸ்பாட் - காரைக்குடி தான்.)
இதுவரை இவர் எடுத்த ஒன்பது படங்களில் சில தோல்வி படங்கள் இருந்தாலும், பெரும்பாலானவை வெற்றிப்படங்களே. தோல்விகளும் பெருமளவு தயாரிப்பாளர்களை பாதித்திருக்காது. ஏனெனில் திட்டமிட்டு படமெடுப்பதில் வல்லவர் இவர். சொன்ன தேதியில் படத்தை முடித்து, வெளியிடும் திறன் கொண்ட சொற்ப இயக்குனர்களில் ஒருவர் இவர்.
தயாரிப்பாளர்களிடையே, விநியோகஸ்தர்களிடயே நல்ல பெயர் இருந்தாலும், தீவிர தமிழ்ப்பட ரசிகர்களிடம் பிரபலமாக இருந்தாலும், பெரும்பாலோரின் பார்வையில் படாமல் இருக்கும் முன்னணி இயக்குனர் இவர். ஒருவகையில், இவருக்கு இது நல்லதாகவே அமைந்திருக்கிறது. இவர் படங்கள் அமைதியாக வெளியாகி, ஆர்பாட்டமாக ஓடும். சமீப காலங்களில், இது மாறி வருகிறது.
கலைஞர்கள் தங்கள் படைப்புகளைத் தாண்டி, மக்களிடம் நல்ல பெயர் வாங்குவது அவர்களது சில தனிப்பட்ட பண்புகளால் தான். ஹரியைப் பற்றி சொல்லும்போது, ஒருவர் விடாமல் அனைவரும் சொல்லும் விஷயம் - உழைப்பு & வேகம். ஒரு வேலையை எடுத்துக்கொண்டால், ராத்திரி பகல் என்று சிரமம் பார்க்காமல் செய்வது. இதனால் தான், தயாரிப்பாளர்கள் விரும்பும் இயக்குனராக தொடர்ந்து ஹரியால் இருக்க முடிகிறது. “பணம் முதலீடு செய்பவர்களை சந்தோஷப்படுத்தினால், ரசிகர்களையும் சந்தோஷப்படுத்த முடியும்” என்பது ஹரியின் எண்ணம். ரசிகர்களையும், முதலாளிகளையும் ஒருசேர திருப்தி செய்ய வேண்டுமென்பது நல்ல விஷயம் தானே?
கமர்ஷியல் படம் எடுப்பது ஒன்றும் தப்பான காரியமோ, சாதாரண காரியமோ அல்ல. அதற்கும் திறமை தேவை. ரசிகர்களுக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது என்ற எண்டர்டெயின்மெண்ட் லாஜிக் தெரிய வேண்டும். ஒரு மசாலா படமென்றால், சரியான விகிதத்தில், சரியான நேரத்தில் ஆக்ஷன் என்கிற காரத்தையும், காமெடி என்கிற இனிப்பையும், செண்டிமெண்ட் என்கிற உப்பையும் சேர்க்க வேண்டும். பெரும்பாலான சமயங்களில் இதை சரியாக செய்பவர் ஹரி.
ஆறு படத்தில் அதிக காரத்தையும், சேவல் படத்தில் அதிக உப்பையும் சேர்த்துவிட்டதே அப்படங்களின் தோல்விக்கு காரணம். எப்பேர்ப்பட்ட சமையல்காரர் என்றாலும், சமயங்களில் கூட குறைய ஆகத்தானே செய்யும்?
இன்றைய தேதியில் எந்தவொரு ஹீரோவையும் தமிழ்நாட்டின் பட்டித்தொட்டியெங்கும் சிறப்பாக கூட்டி செல்லும் ஆற்றல் உள்ள இயக்குனர் - ஹரி. விஷால் ஒரு பேட்டியில் தன்னை தமிழ்நாட்டின் மூலை முடுக்கு எல்லாம் கொண்டு சென்றது ஹரி தான் என்று சொல்லி இருக்கிறார். ஆனாலும், ஹரி இன்னமும் அடக்கமாக, புகழ் வெளிச்சத்தில் தலையை காட்டாமல், ஒளிந்து ஓடிக்கொண்டே இருக்கிறார்.
அவர் சமீபத்தில் ஆனந்த விகடன் பேட்டியில் கூறியிருப்பது, “ஹரி டைரக்ஷனை நம்பி யாரும் படம் பார்க்க வர்றதில்லை. ஹீரோக்களை நம்பித்தான் வர்றாங்க. நான் அவங்க முதுகுக்குப் பின்னாடி பதுங்கிட்டு பில்ட்-அப் கொடுக்குறேன்... அவ்வளவுதான். நான் பாரதிராஜா, பாலா, அமீர், செல்வராகவன் மாதிரி இல்லை. என்னை மட்டும் வெச்சுக்கிட்டு ஜெயிக்க என்னால் முடியாது. நான் காவிய டைரக்டர் கிடையாது. பெரிய கிரியேட்டரும் கிடையாது. அதனால கமர்ஷியல் படம் பண்றேன்.”
உண்மைதான். இன்னொரு உண்மை. இவரை வைத்து படம் பண்ணும் தயாரிப்பாளர்கள் அனைவரும், இவரை வைத்து அடுத்து ஒரு படம் எடுக்கவும் தயாராக இருப்பார்கள். இது எல்லா இயக்குனர்களுக்கும் அமைவதில்லை.
இவர் தன்னை பெரிய கிரியேட்டர் இல்லையென்று சொன்னாலும், இவருடைய திரைக்கதை சோர்வில்லாமல், வேகமாக செல்லும். சின்ன ட்விஸ்ட்டுகள், பின்பகுதியில் அமையும் முடிவுகளுக்கு ஏதுவாக முன்பகுதியில் வைக்கும் சம்பவங்கள் என சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது.
அதே சமயம், குறைகள் இல்லாமல் இல்லை. வசனங்கள் கவனம் பெற வேண்டும் என்பதற்காக இவர் அமைக்கும் வசனங்கள், ஆரம்பத்தில் செம பஞ்ச் ரகமாக இருந்து, சமீப காலங்களில் லொட லொடவென்று மாறியிருக்கிறது. ”ஒருச்சாமி, ரெண்டு சாமி” வசனத்திற்காக, ரஜினியை கைத்தட்ட வைத்தவராயிற்றே? (ரஜினி ஹரியிடம் கதை கேட்டார் என்றும், ஐயா கதையை தான் ஹரி ரஜினியிடம் சொன்னார் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஹரியின் மாஸ்டர் பீஸ் என்று நான் கருதுவது, ஐயாவைத் தான்)
இன்னொரு குறை - இவர் படங்களின் பாடல்கள். சிறந்த ட்யூனை, தன் இசையமைப்பாளர்களிடம் இருந்து கறப்பவரல்ல ஹரி. அதுவா அமைந்தால் உண்டு என்ற ரகம் தான். இவருடைய வேகமே, இது போன்ற விஷயங்களில் நெகட்டிவ் காரணமாக அமைந்துவிடுகிறது என்று நினைக்கிறேன். தற்போது, பாடல்கள் வேறு எழுத ஆரம்பித்து இருக்கிறார்.
இவருடைய அனைத்து படங்களுக்கும் ப்ரியன் தான் ஒளிப்பதிவு. எந்த குறையும் சொல்லமுடியாத ஒளிப்பதிவாளர். விஜயக்குமார் வீட்டு மாப்பிள்ளை என்பதால், இவர் படங்களில் விஜயக்குமார் கண்டிப்பாக இருப்பார். சகலை ஆகாஷையும் காணலாம். அருண் விஜய்? ம்ஹும்! அதுக்கு இன்னும் காலமிருக்கு.
’அருவா இயக்குனர்’ என்னும் விமர்சனத்திற்கு, இவருடைய பதில் - ”கிராமத்து மக்களின் வன்முறை வெளிப்பாடு அருவாள்” என்பது தான். ஆனாலும், இவர் படங்களில் சண்டைக்காட்சிகளின் எண்ணிக்கை குறைவாக தான் இருக்கும். என்ன! சில படங்களில், ரத்தம் கொஞ்சம் ஓவராக சிந்தும். இவர் படங்களில் பறக்கும் கார் ஆக்ஷன் சீன்களுக்கு நான் ரசிகன். கார் வெடித்து மேலே பறக்காமல், ஐயா படத்தில் பக்கவாட்டில் பறந்து ஒரு பனை மரத்தில் மோதும். என்னே திங்கிங்! எனக்கும் தான் என்னே ரசனை!
எது எப்படியோ, பொழுதுபோக்கு படம் கொடுப்பதில் முக்கியமான இயக்குனர் - ஹரி. அதை மாஸ் எண்டர்டெயினராக கொடுப்பதில் முக்கியமானவர் - இயக்குனர் ஹரி.
பல வருடங்களுக்கு முன்பே, என் ப்ரொபைலில் ஹரியின் பெயரைப் போட்டுவிட்டு, இன்னமும் அவரைப் பற்றி ஒரு பதிவு போடாமல் இருந்தால் எப்படி? பதிவு போட்டாச்சு!